மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தில், 16 வயது சிறுமி ஒருவர் பிரசவித்த சில நிமிடங்களிலேயே தனது பச்சிளம் குழந்தையை நர்சிங் ஹோமின் கழிவறையில் இருந்த ஜன்னல் வழியாக வெளியே வீசியதாகக் கூறப்பட்ட நிலையில், அக்குழந்தை கடந்த சனிக்கிழமையன்று உயிரிழந்ததாக, காவல்துறை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி தன் பெற்றோர்களிடம் கடுமையான வயிற்று வலி இருப்பதாகக் கூறியதை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை (நவ 6) இரவு தாமதமாக நர்சிங் ஹோமில் அனுமதிக்கப்பட்டார். சனிக்கிழமை காலையில், அந்த 16 வயது யாருடைய உதவியுமின்றி கழிவறையில் பிரசவித்ததாக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.
"வயிற்று வலி அதிகரித்ததாகக் கூறியதை அடுத்து, சனிக்கிழமை காலை அந்த சிறுமி கழிவறைக்குச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அங்கு அவர் யாருடைய உதவியும் இன்றி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்," என்று உத்தர்பாரா காவல் நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு அந்த சிறுமி, பச்சிளம் குழந்தையைக் கழிவறை ஜன்னல் வழியாக வெளியே வீசியதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குழந்தையை வீசிய இடத்திற்கு வழியாக சென்ற ஒருவர், குழந்தை இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவுய்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செவிலியர் ஒருவர் குழந்தையை உள்ளே கொண்டு சென்றபோது, அந்த குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து சிறுமியின் குடும்பத்தினரிடம் கேட்டபோது, "அவள் கர்ப்பமாக இருந்தது தங்களுக்குத் தெரியாது" என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், சிறுமிக்கு சாதாரண வயிற்று வலி மட்டுமே இருப்பதாக நம்பி, குடும்பத்தினர் அவரை நர்சிங் ஹோமிற்கு அழைத்து வந்துள்ளதாகவும், அவர்களின் கூற்றுகளை நாங்கள் சரிபார்த்து வருகிறோம்," என்றும் நர்சிங் ஹோம் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நர்சிங் ஹோம் உரிமையாளர் சுசேதா முகர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், அந்த சிறுமி வெள்ளிக்கிழமை இரவு தாமதமாக அனுமதிக்கப்பட்டதாகவும், சனிக்கிழமை காலை அவருக்கு இரத்தப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர், "சனிக்கிழமை காலை அவரது வயிற்று வலி தீவிரமடைந்ததால், அவர் தானாகவே கழிப்பறைக்கு நடந்து சென்றுள்ளார். அங்கு யாருடைய உதவியும் இன்றி குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இதனையடுத்து, பச்சிளம் குழந்தையை ஜன்னல் வழியாக வெளியே எறிந்துள்ளார்," என்று உரிமையாளர் தெரிவித்துள்ளார். சிறுமியை நர்சிங் ஹோமில் சேர்த்தபோது, "அவர் கர்ப்பமாக இருக்கக்கூடுமா?" என்று ஊழியர்கள் அவரது குடும்பத்தினரிடம் பலமுறை கேட்டதாகவும், ஆனால் அவர்களோ தங்களுக்கு அதுபற்றி எதுவும் தெரியாது என்று கூறியதாகவும் முகர்ஜி மேலும் தெரிவித்துள்ளார்.
"எங்கள் மகள் கர்ப்பமாக இருப்பது எங்களுக்குத் தெரியாது. நேற்று மாலை அவளுக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால், நாங்கள் அவளை நர்சிங் ஹோமிற்கு அழைத்து வந்தோம். இன்று காலை மருத்துவமனையிலிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தபோதுதான் இந்தச் சம்பவம் பற்றித் தெரிந்துகொண்டோம்," என்று அப்பெண்ணின் தாய் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் கவனத்தில் கொண்டுள்ளதாகவும், வழக்கின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
"இந்தச் சம்பவம் தொடர்பான சூழ்நிலைகளை நாங்கள் விசாரித்து வருகிறோம். கண்டறியப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் அந்த நர்சிங் ஹோமின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதுடன், இது தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை செய்வோம்" என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அந்த நர்சிங் ஹோமில் இது போன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். "இது அடிக்கடி நிகழும் ஒரு நிகழ்வு. இதற்கு முன்னரும் அந்த வளாகத்திலிருந்து ஒரு பச்சிளங்குழந்தை மீட்கப்பட்டுள்ளது," என்று உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.