க்ரைம்

“அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்ட 17 வயது சிறுவன்” - விடுமுறைக்கு வந்தவருக்கு நேர்ந்த கொடூரம்.. பழிக்கு பழி சம்பவமா?

பைக்கை அன்புச்செல்வன் கேட்டபோது பெருமாநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகே வந்து எடுத்து செல்லவும் என்று அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

Mahalakshmi Somasundaram

புதுக்கோட்டை மாவட்டம், பெரும நாடு கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகேஸ்வரி தம்பதியரின் மகன் 17 வயதுடைய அன்புச்செல்வன். இவர் ஐடிஐ முடித்துவிட்டு ஓசூரில் பணியாற்றி வந்துள்ளார்‌‌. கடந்த 2024ம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த உறவினரான சத்யராஜுக்கும் அன்புச்செல்வனின் தாய் மாமாவான முருகானந்தத்திற்கும் பவர் பிளாக் கல் பாதிப்பு வேலை ஊதியம் பிரிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் தாய் மாமா முருகானந்தத்திற்கு ஆதரவாக சிறுவன் அன்புச்செல்வன் செயல்பட்ட நிலையில் இருவரும் சேர்ந்து சத்யராஜை தாக்கியதில் படுகாயமடைந்த சத்யராஜ் மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சையில் இருந்த பிறகு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு அன்புச்செல்வன் மீதும் அவரது தாய் மாமாவான முருகானந்தம் மீதும் வழக்கு நிலுவையில் உள்ளது. கொலை வழக்கில் அன்புச்செல்வன் இருந்ததால், அவரை பெற்றோர் இங்கு இருந்தால் பிரச்சனை ஏற்படும் என்பதற்காக ஓசூருக்கு அனுப்பி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இந்த வழக்கின் விசாரணைக்காக ஓசூரில் இருந்து பத்து நாள் விடுமுறைக்கு நேற்று சொந்த ஊருக்கு அன்புச்செல்வன் வந்துள்ளார். இந்நிலையில்தான் நேற்று இரவு அன்புச்செல்வனின் பைக்கை அவரது நண்பர்கள் வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் அந்த பைக்கை அன்புச்செல்வன் கேட்டபோது பெருமாநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகே வந்து எடுத்து செல்லவும் என்று அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். கூறப்படும் நிலையில் பைக்கை எடுக்க அன்புச்செல்வன் பெருமாநாடு டாஸ்மாக் அருகே சென்றபோது அவரை சுற்றி வளைத்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினர். இதில் தலையிலும், கைகளிலும் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அன்னவாசல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து அன்புச்செல்வனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சிறுவன் அன்புச்செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? ஏற்கனவே அன்புச்செல்வன் கொலை வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அந்த வழக்கின் முன்விரோதம் காரணமாக அன்புச்செல்வன் படுகொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து அன்னவாசல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரக்கூடிய நிலையில் சிலரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.