கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலப்பட்டியில் தனியாக வசித்து வந்தவர் 79 வயதுடைய தாயாரம்மாள். இவர் கடந்த (ஏப் 26) ஆம் தேதி இரவு திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை லந்தகோட்டையில் வசிக்கும் தனது மகள் மனோரஞ்சிதத்துடன் செல்போனில் பேசிவிட்டு, வீட்டிற்கு வெளியே உள்ள திண்ணை அருகே கட்டிலில் படுத்து உறங்கியுள்ளார். மறுநாள் காலை மூதாட்டியின் உறவினர் அருணாச்சலம் அந்த வழியாக சென்றுள்ளார்.
அப்போது, வழக்கமாக அதிகாலை 4 மணிக்கே எழுந்து வீட்டு வேலைகளை செய்யும் தாயாரம்மாள் அன்றைய தினம் 6.45 மணி ஆகியும் எழாததால் சந்தேகம் அடைந்து, வீட்டு வாசல் கேட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கை, கால்கள், மற்றும் வாய் ஆகியவை துணியால் கட்டப்பட்டு இறந்த நிலையில் தாயாரம்மாள் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர் அருணாச்சலம் மூதாட்டியின் மகள் மனோரஞ்சிதத்திற்கு போன் மூலம் தகவல் தெரிவித்த நிலையில், அவர் சாலப்பட்டிக்கு விரைந்து வந்திருக்கிறார்.
பின்னர் தாயாரின் சடலத்தை பார்த்த மனோரஞ்சிதம் அவர் அணிந்திருந்த அரை சவரன் தோடு மற்றும் கால் சவரன் மூக்குத்தி ஆகியவை இல்லாததை கவனித்து இது குறித்து வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தகவலின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்ததில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த 19 வயதுடைய பாண்டீஸ்வரன் என்பவர் தான் மூதாட்டி தயாரம்மாளை கொலை செய்துவிட்டு தப்பியது தெரியவந்தது.
தொடர்ந்து அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் ரயிலில் பொதுப் பெட்டியில் அமர்ந்து பயணம் செய்வது தெரியவந்தது. இதையடுத்து கரூர் மாவட்ட போலீசார் சென்னை சென்ட்ரல் போலீசாரை அலர்ட் செய்த நிலையில், சென்ட்ரல் போலீசார் பாண்டீஸ்வரனை கைது செய்து, கரூர் மாவட்டம் வெள்ளியணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சென்னை விரைந்த வெள்ளியணை போலீசார், கொலையாளி பாண்டீஸ்வரனை கைது செய்து கரூர் அழைத்துச் சென்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்