க்ரைம்

“தாயின் தலையை வெட்டி இரவு முழுவதும் உடன் வைத்திருந்த 19 வயது மகள்! மாந்திரீகமா? போதை தாக்கமா? 

தந்தை பிரேமேந்திர மலங் மற்றும் அவளது சகோதரியையும் பூஜா தாக்கியுள்ளார்

Muthu Lakshmi

அசாமில் நடந்த ஒரு கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் 19 வயதான இளம்பெண் ஒருவர் தனது தாயை மிகவும் கொடூரமாகக் கொலை செய்ததுடன், துண்டிக்கப்பட்ட தலையுடன் இரவு முழுவதும் சுற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

டெரமுக் லலுங் கிராமத்தைச் சேர்ந்த பூஜா மலங் என்பவர், புதன்கிழமை தனது 42 வயதான தாய் அனுமை மலங்கையை  ‘தாவோ’ எனப்படும் பெரிய கத்தியால் தாக்கி, அவரது தலையை உடலிலிருந்து துண்டித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் மிகவும் கொடூரமாக நடந்ததாகவும், சம்பவ இடமே ரத்தக்குளமாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் போது, தாயை காப்பாற்ற முயன்ற தந்தை பிரேமேந்திர மலங் மற்றும் அவளது சகோதரியையும் பூஜா தாக்கியுள்ளார். இதில் இருவரும் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். குடும்பத்தினர் எதிர்பார்க்காத இந்த தாக்குதல் அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொடூரத்தை நிகழ்த்திய பின்னர், துண்டிக்கப்பட்ட தலையுடன் பூஜா மலங் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், அந்த தலையை இரவு முழுவதும் தன்னுடன் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. மறுநாள் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்து செய்து விசாரித்தனர்.

விசாரணையில் இந்த சம்பவத்திற்கு முன்பு தாய் மற்றும் மகள் இடையே எந்தவிதமான தகராறும் இருந்ததாக தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால், இந்த கொலைக்கான உண்மையான காரணம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. சில உள்ளூர்வாசிகள், குற்றம் சாட்டப்பட்ட பூஜா ‘மாந்திரீகம்’ அல்லது சூனியச் போன்ற செயல்களில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் அவர் போதைப்பொருட்களின் தாக்கத்தில் இருந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். இந்த இரு கோணங்களிலும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சம்பவ இடத்திலிருந்து அரிவாள், கத்தரிக்கோல், எண்ணெய், குங்குமம், மண்பானை போன்ற மாந்திரீகம் தொடர்பான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை இந்த கொலையின் பின்னணி குறித்து மேலும் மர்மத்தை அதிகரித்துள்ளன. போலீசார், பூஜா மலங் மீது கொலை மற்றும் அபாயகரமான ஆயுதங்களை பயன்படுத்தி கடுமையான காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுகள் பதிவு செய்துள்ளனர். இந்த கொலைக்கான உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் அசாம் மாநிலத்தில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்ப உறவுகளுக்குள் கூட இப்படியான கொடூரங்கள் நடைபெறுவது சமூகத்தில் பெரும் கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்