சத்தீஸ்கரின் பிலாயில் உள்ள பேயிங் கெஸ்ட் விடுதி ஒன்றில், 19 வயது மருந்தியல் மாணவி ஒருவர் தனது காதலை நிராகரித்து, தொலைபேசி எண்ணையும் முடக்கியதால், அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படும் 24 வயது இளைஞர் ஒருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெமேதரா மாவட்டம், கும்ஹி கிராமத்தைச் சேர்ந்த குஷி சாஹு என்ற அந்தப் பாதிக்கப்பட்ட பெண், ஒரு தனியார் கல்லூரியில் மருந்தியல் படிப்பைத் தொடர்வதற்காக சமீபத்தில் பிலாய்க்குக் குடிபெயர்ந்துள்ளார். மேலும், தனது கல்விக்கு பணத்தேவை இருந்ததால் வைஷாலி நகரில் உள்ள ஒரு 'கஃபே'யில் பகுதி நேரமாகவும் பணிபுரிந்து வந்துள்ளார். பலோடாபஜார் மாவட்டத்தைச் சேர்ந்த பிண்டு சாஹு என்பவரே குற்றம் சாட்டப்பட்டவர் என காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, குஷி அவரது தொலைபேசி எண்ணை முடக்கிய பிறகு, கடந்த ஒரு மாதமாக அவர் குஷியை வெறித்தனமாகப் பின்தொடர்ந்து, வெவ்வேறு கைபேசி எண்களிலிருந்து மீண்டும் மீண்டும் அழைத்து வந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை அன்று ராம்நகரில் உள்ள குஷியின் வாடகை அறைக்குக் குற்றம் சாட்டப்பட்டவர் வந்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது, அவரது அறைத் தோழி குளியலறையில் இருந்துள்ளார். அந்த சமயத்தில் குஷி அறையில் தனியாக இருந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் குஷியை எதிர்கொண்ட பிறகு வாக்குவாதம் மூண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் குஷியை கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றதாகவும், பின்னர் கத்தியால் தாக்கி அவரது வயிறு, முதுகு மற்றும் கைகளில் சுமார் 10 முறை குத்தியதாகவும் கூறப்படுகிறது.
குஷியை மீட்பதற்குள், அதிகப்படியான இரத்தப்போக்கினால் அவர் உயிரிழந்துள்ளர். பின்னர் அறைத்தோழி திரும்பி வந்து, குஷி இரத்த கோலத்தில் கிடப்பதைக் கண்டபோது இந்தக் கொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து, வீட்டு உரிமையாளர் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார். அவர்கள் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
விசாரணையின் போது, ஒரு நபர் தன்னை தொலைபேசியில் தொடர்ந்து துன்புறுத்துவதாக சுமார் ஒரு வாரத்திற்கு முன்பே குஷி தனது சகோதரரிடம் தெரிவித்திருந்ததை காவல்துறையினர் தெரிந்துகொண்டனர். கொலைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, குற்றம் சாட்டப்பட்டவர் குஷியின் சகோதரரை மிரட்டியும் உள்ளார். மேலும், குஷி பணிபுரிந்த கஃபே உரிமையாளரிடம், "அவளை வேலையை விட்டு விலகச் செய்துவிட்டு, அதற்குப் பதிலாக தன்னைத் திருமணம் செய்யச்சொல்லுங்கள்" என்று அவர் எச்சரித்திருந்ததையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர். குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தி இணையம் மூலம் வாங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கொலைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் ராய்ப்பூர் நோக்கித் தப்பிச் சென்றுள்ளார். பின்பு, அங்கு அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவங்களை மீண்டும் நடித்துக் காட்டுவதற்காக அவர் சனிக்கிழமையன்று குற்ற நடந்த இடத்திற்கு மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்