கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே உள்ள கொடுக்கன் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் 46 வயது திருநங்கையான கவியரசன் என்ற காவ்யா. இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்த நிலையில், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறிய காவ்யா குடும்பத்தை விட்டு வெளியேறி கொடுக்கன் பாளையத்தில் தனியாக வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளார். மது அருந்தும் பழக்கம் உடைய காவ்யா தினந்தோறும் B.முட்லூர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் 19 வயது மகன் வசந்த் என்பவரும் அந்த கடையில் மது அருந்துவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். எனவே மதுபான கடையில் மது அருந்தும் போது காவ்யாவிற்கும் வசந்திற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவார்கள் என சொல்லப்படுகிறது, இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை 24) இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் இருவரும் சேர்ந்து அருகில் இருந்த சவுக்கு காட்டில் தனிமையில் இருக்க சென்றுள்ளனர்.
வசந்த்துடன் தனிமையில் இருக்க காவ்யா வசந்த்திடம் 200 ரூபாய் பணம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இருவரும் தனிமையில் இருந்த நிலையில் பாலியல் இச்சை தீராத வசந்த் காவ்யா அறுவை சிகிச்சை செய்து கொள்ளாத திருநங்கை என்பதை அறிந்து, தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த வசந்த், காவ்யாவை தனது காலால் எட்டி உதைத்து சரமாரியாக தாக்கியுள்ளார், இதில் காவ்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். காவ்யாவை அடித்து விட்டு அப்பகுதியில் இருந்து தப்பித்து சென்ற வசந்த் நெடுஞ்சாலையில் உள்ள கடையில் டீ குடித்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
மறுநாள் காலை அவ்வழியே சென்ற பொதுமக்கள் காவ்யாவின் உடலை பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர், இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வசந்த்தை தனிப்படை அமைத்து கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நடந்ததை விளக்கி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். திருநங்கை காட்டுக்குள் சரமாரியாக அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.