க்ரைம்

பிரபல கல்லூரி பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி 2 கோடி ரூபாய் மோசடி...

மதுரை அன்னை பாத்திமா கல்லூரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி 2 கோடி ரூபாய் மோசடி செய்த முன்னாள் பேராசிரியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Malaimurasu Seithigal TV

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திரளியில் பிரபல அன்னை பாத்திமா கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியின் பெயரில் சமூக வலைதளமான முகநூலில் கல்லூரிக்கு என தனிப் பக்கம் உள்ளது. இந்த கல்லூரியின் தலைவர் ஜாஹிர் ஷா கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மதுரை சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்று அளித்தார்.

அதில் அன்னை பாத்திமாக் கல்லூரி பெயரில் முகநூலில் போலி கணக்குகள் துவங்கப்பட்டு சிலர் மாணவர் சேர்க்கையில் தில்லுமுல்லு செய்து பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டதில் அந்த கல்லூரியில் பணியாற்றிய முன்னாள் பேராசிரியர் சீனிவாசன் மற்றும் ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த சபரீசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில்  இருவரும், கல்லூரி பெயரில் போலி முகநூல் பக்கம்  தொடங்கி அதில் தொடர்பு கொள்ளும் மாணவர்களிடம் தங்களது கல்லூரியில் இடம் காலியில்லை எனப் போலித் தகவலை கூறி, பிற கல்லுரிகளில் சேர்க்கை பெற்று தந்து இரண்டு கோடிக்கும் மேல் நூதன மோசடி செய்து சம்பாதித்தது தெரியவந்தது.