க்ரைம்

திருநங்கையை கடத்திச் சென்ற நபர்... மீட்க சென்ற காவலரை கடித்த பரிதாபம்!!

Malaimurasu Seithigal TV

மதுரவாயல் அருகே, மர்ம நபர்கள் இருவர், திருநங்கை ஒருவரை கத்தியை காட்டி கடத்திச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலை, வானகரம் பகுதியில் திருநங்கைகளான பிளசிகா மற்றும் ஜனனி இருவரும், நேற்று முன்தினம் இரவு, அவ்வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே வழியாக சென்ற இரண்டு நபர்கள், பிளசிகாவிடம் கத்தியை காட்டி மிரட்டி ஆட்டோவில் கடத்தி சென்றுள்ளனர்.

இதனைக் கண்டதும் உடன் இருந்த ஜனனி, மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை செய்த மதுரவாயல் போலீசார், செல்போன் சிக்னலை வைத்து தேடிய போது, செட்டியார் அகரம் பகுதியில் ஒரு வீட்டில் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரையும் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். போலீசாரை கண்டதும் அதில் ஒருவர் கத்தியை காட்டி போலீசாரையே மிரட்ட தொடங்கியுள்ளார். 

ஒரு கட்டத்தில் போலீசார் பாய்ந்து சென்று, கத்தியை காட்டி மிரட்டிய நபரை பிடிக்க முயன்ற போது, அந்த நபர் காவலர் ஒருவரை பிடித்து கடித்துள்ளார். மற்ற போலீசார் சேர்ந்து அந்த நபரை மடக்கி பிடித்து பிளெசிகாவை மீட்டுள்ளனர். பின்னர் கடிபட்ட போலீஸ்காரரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 

பின்னர் அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிபட்ட நபர்கள் ஆவடி, காமராஜர் நகரை சேர்ந்த ஜெகன்(30), ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (23) என்பது தெரிய வந்தது. இதில் தப்பி ஓடிய போது தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இருவரையும் கைது செய்த போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் ஜெகன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது. 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது