மகாராஷ்டிராவின் நந்தூர்பார் மாவட்டத்தில், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படும் வழக்கில் 22 வயது இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காவல்துறையின் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் 2022 ஆம் ஆண்டு முதல் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைனர்களின் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பரப்புவதாக மிரட்டி, அவர்களை மிரட்டியும் பணம் பறித்தும் வந்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவரின் செல்போனிலிருந்து 600-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மீட்கப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் அஸ்வினி சனாப் தெரிவித்தார். அவரது செல்போனில் கண்டெடுக்கப்பட்ட வீடியோக்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்ட பிறகு, காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யத் தொடங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
"ஒரு நபர் பணம் கொடுத்து சிறுவர்களை ஆசை காட்டி ஏமாற்றி, அவர்களுக்கு எதிராக குற்ற செயல்களை செய்து வருவதாகக் காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. குற்றம் சாட்டப்பட்டவர் ரைசிங்புராவைச் சேர்ந்த 22 வயதான சேதன் பிரகாஷ் கோலி என அடையாளம் காணப்பட்டார். அவரது கைபேசியைச் சோதித்தபோது, அதில் ஏராளமான ஆபாசமான காணொளிகளும் புகைப்படங்களும் இருந்தன. தடயவியல் குழுவினர் அவரது கைபேசியைப் பறிமுதல் செய்து, தேவையான அனைத்து சோதனைகளையும் முடித்து, மேலதிகப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்," என்று காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
"தற்போது நடைபெற்ற விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் 2022-ஆம் ஆண்டு முதல் இந்தச் செயல்கள் அனைத்தையும் செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளப்பட்டு, அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும்," என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட யாரும் இதுவரை முன் வந்து புகார் அளிக்காததால் காவலர் ரூபேஷ் பகாரே முறைப்படியான புகாரைத் தாக்கல் செய்தார். இந்த முதல் தகவல் அறிக்கையில், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POCSO), 2012 மற்றும் சிறார் நீதி சட்டம், 2015 ஆகியவற்றின் பிரிவுகளும் இடம்பெற்றுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.