குருகிராமின் செக்டர் 53 பகுதியில் உள்ள ஒரு பிஜி (PG) குடியிருப்பில் தங்கியிருந்த 29 வயது இளைஞர், பாலுணர்வை தூண்டும் மாத்திரைகளை (Sex-enhancing drugs) அதிகப்படியாக உட்கொண்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞரின் அறையில் இருந்து பல்வேறு மருந்துகள் மற்றும் ஹெல்த் சப்ளிமெண்ட் மாத்திரைகளின் உறைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமை அன்று காவல்துறை அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
நாக்பூரைச் சேர்ந்த ரோஹித் லால் என்ற அந்த இளைஞர், புது தில்லியில் உள்ள குவாலிட்டி கவுன்சில் ஆப் இந்தியா (Quality Council of India) அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இதற்காக அவர் குருகிராமில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தார். வியாழக்கிழமை காலை ரோஹித்துடன் வேலை பார்க்கும் நண்பர் ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டதாலேயே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. வழக்கமாக இருவரும் ஒன்றாகவே அலுவலகத்திற்குச் செல்வது வழக்கம், ஆனால் அன்று ரோஹித் போனை எடுக்காததாலும், கதவைத் திறக்காததாலும் அவரது நண்பர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ரோஹித் படுக்கையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது அறையைச் சோதனை செய்தபோது, அங்கு சிதறிக் கிடந்த மருந்து உறைகள் மற்றும் ஆரோக்கிய பானங்களுக்கான பவுடர் பாக்கெட்டுகளை போலீசார் கண்டெடுத்தனர். ஆரம்பகட்ட விசாரணையில், ரோஹித் தனது வருங்கால மனைவியை (Fiancee) நேரில் சந்திப்பதற்காக அழைத்திருந்தது தெரியவந்தது. ஆனால் அவர் வருவதற்கு முன்பே இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
பாலுணர்வைத் தூண்டும் மாத்திரைகளை அவர் அளவுக்கு அதிகமாக (Overdose) உட்கொண்டிருக்கலாம் என்றும், அதன் காரணமாக ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தற்கொலையா? அல்லது விபத்தா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து செக்டர் 53 காவல் நிலைய அதிகாரி சதேந்தர் ராவல் கூறுகையில், கைப்பற்றப்பட்ட மருந்துகள் மற்றும் உடலின் சில பாகங்கள் (Viscera) தடயவியல் பரிசோதனைக்காக (FSL) அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அந்த அறிக்கையின் முடிவுகள் வந்த பின்னரே ரோஹித்தின் மரணத்திற்குப் பின்னால் உள்ள உண்மையான காரணம் தெரியவரும் என்றும், அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்