க்ரைம்

போலி அரசு பணி ஆணை...20 பேரை ஏமாற்றி லட்சத்தை கொள்ளையடித்த மர்ம கும்பல்...!

Tamil Selvi Selvakumar

கள்ளக்குறிச்சியில் போலி அரசு பணி ஆணை வழங்கி 20 பேரிடம் 40 லட்சம் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 18ம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணி ஆணை  வழங்கினார். இதனைத் தொடர்ந்து மீண்டும் இதே பணியமர்த்தல் ஆணைக்கான எண்ணுடன் அச்சு அசலாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆள்சேர்ப்பு நடப்பதாக கடந்த 4ம் தேதி நாளிதழில் விளம்பரம் வந்துள்ளது. 

இதனை நம்பி சென்ற 20க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் 40 லட்சம் வரை பெற்று கொண்டு சிலர் பணி ஆணைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இந்த பணி ஆணையை உண்மை என்று நம்பி அதனை எடுத்து கொண்டு பணியில் சேருவதற்காக அந்தோணி சேவியர் என்பவர் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், அங்கு அது போலி பணி நியமன ஆணை என்பதும், பணி ஆணை என்ற பெயரில் 40 லட்சம் மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது.  

பின்னர் இந்த மோசடி சம்பவம் குறித்து புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பெயர் மற்றும் கல்லூரி முதல்வர் கையொப்பம், சீல் ஆகியவற்றை தயார் செய்து போலியான அரசு பணிக்கான ஆணையை வழங்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அரசு பணி ஆணையை பெற்ற 20 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.