Five family members found dead in Greater Noida 
க்ரைம்

"இரவு சாப்பிட்ட நூடுல்ஸ்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மர்ம மரணம்" - சொத்து தகராறா? ஃபூட் பாய்சனா?

அக்குடும்பத்தினருக்குள் சொத்து சம்பந்தமாக குடும்பத் தகராறுகள் நடந்து வந்ததாக அக்குடும்பத்தின் அண்டை வீட்டார் குற்றம் சாட்டியுள்ளனர்.

Vinvizhi Leninton

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் ரபுபுரா பகுதியில், மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், இந்த மரணங்கள் உணவு விஷத்தால் (Food poison) ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுவதாகவும், கள ஆய்வுப் பிரிவு மற்றும் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தில் முழுமையான விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களாக, மகேஷ் (37), அவரது மனைவி லலிதா (35), அவர்களது மகன்கள் லட்டு (11) மற்றும் சாக்ஷத் (3), மகள் மிஷ்டி (7) என போலீசார் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, அண்டை வீட்டாரும், உயிரிழந்தவர்களில் ஒருவரான மகேஷின் தாயாரும், அந்தக் குடும்பத்தினர் முந்தைய இரவு நூடுல்ஸ் சாப்பிட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனாலும் கூட, மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் பிற அறிவியல் ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில்தான் உயர்மட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இரவு 10 மணியளவில் குடும்பத்தினர் உறங்கச் செல்வதற்கு முன் உணவு உண்டதாக துணை ஆணையர் தெரிவித்துள்ளார். "அவர்கள் உட்கொண்ட பொருட்களின் அடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம், மேலும் விரிவான விசாரணைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அறிக்கை கிடைத்தவுடன், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையும், இது ஏன் நடந்தது என்பதும் தெரியவரும்," என்றும் அவர் கூறிள்ளார்.

மேலோட்டமாக இந்த நிகழ்வு 'உணவு நச்சினால் ஏற்பட்டிருக்கலாம்' என்று தோன்றினாலும், இந்த சம்பவத்தினை குறித்து வேறொரு பார்வையையும் அக்கம் பக்கத்தினர் தருகின்றனர்.

அதாவது, இதற்கிடையில், அக்குடும்பத்தினருக்குள் சொத்து சம்பந்தமாக குடும்பத் தகராறுகள் நடந்து வந்ததாக அக்குடும்பத்தின் அண்டை வீட்டார் குற்றம் சாட்டியுள்ளனர். மகேஷின் தாய் ஏற்கனவே சொத்தை அவரது மகளின் பெயருக்கு மாற்றிவிட்டதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறிவந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி அவர்களுக்குள் தொடர்ந்து வாக்குவாதமும் நடைபெற்று வந்துள்ளது. மேலும், சம்பவத்தன்று, மகேஷின் தாய் நூடுல்ஸ் சமைத்துக் குடும்பத்தினருக்குப் பரிமாறியதாக அண்டை வீட்டுக்காரர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆதாரங்களை கொண்டே மேற்கொண்டு விசாரணைகளை நடத்த முடியும் என்று காவல்துறையினர் கூறும் நிலையில் இதற்கான விசாரணைகளை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.