க்ரைம்

“அந்த தாத்தா பேட் டச் பண்ணாரு..” - 2 சிறுமிகளை வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறல்!

தங்களுக்கு நேர்ந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்..

Muthu Lakshmi

திருப்பத்தூர் மாவட்டம் காமராஜர் நகர் பகுதியில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது மற்றும் 4 வயது சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படும் 54 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா ஜி. ராவ் என்பவரின் மகன் பாபு (54). இவரது வீட்டின் அருகே 8 மற்றும் 4 வயது உடைய இரண்டு சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது சிறுமிகளை வீட்டிற்குள் அழைத்துச் சென்ற பாபு, அவர்களிடம் பேட் டச் செய்து, பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சிறுமிகள் இருவரும் பாபுவின் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து, தங்களுக்கு நேர்ந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் கூறிய தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிறுமிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் புகாரின் அடிப்படையில், பாபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட பாபுவை போலீசார் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக பெற்றோர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, குழந்தைகள் தங்களுக்கு நேரும் அசாதாரணமான அல்லது தவறான நடத்தைகள் குறித்து பெற்றோரிடம் தயக்கமின்றி தெரிவிக்கும் வகையில் அவர்களிடம் நம்பிக்கையான சூழலை உருவாக்குவது அவசியம் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுமிகளிடம் முதியவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க Child Helpline 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்