க்ரைம்

600 சவரன் நகை மோசடி; 2 பேர் கைது!

Malaimurasu Seithigal TV

தூத்துக்குடி அருகே நூதன முறையில் 600 பவுன் நகை மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே அகரம் பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி (42) என்பவர் தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே எம்.சவேரியார்புரம் பகுதியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக வசித்து வருகிறார். இவர் அப்பகுதி பெண்களிடம் நெருங்கி பழகி மகளிர் சுய உதவிக்குழு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு உதவிகளை வழங்கி வந்தார். இந்நிலையில் பெண்களிடம் அதிகமான வட்டி பெற்று தருவதாக கூறி நூற்றுக் கணக்கான பெண்களிடம் சுமார் 600 பவுனுக்கு மேல் தங்க நகைகளை பெற்று சுப்புலட்சுமி தலைமறைவானார். 

இதனால் நகைகளை கொடுத்து ஏமாந்தவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அவர்களது புகாரின் மீது உரிய விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி மாவட்ட குற்றப்பிரிவு போலிசாருக்கு எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி நகைகளை மோசடி செய்த சுப்புலட்சுமி மற்றும் அவருடன் இருந்த ஒரு ஆண் உள்ளிட்ட 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.