கோவையில் அதிர்ச்சி சம்பவம் 
க்ரைம்

“13 வயது நண்பனை கொன்று, குழிதோண்டி புதைத்த ஏழாம் வகுப்பு மாணவர்கள்” - கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

விளையாடச் சென்ற இடத்தில் இரு நண்பர்களால் ஏழாம் வகுப்பு மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்டு...

மாலை முரசு செய்தி குழு

கோவை மாவட்டம், இருகூர் அருகில் உள்ள நியூ காலனி பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா (42). இவரது மூத்த மகன் தாஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (13), ஆர்.ஜி. புதூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். தற்போது கோடை விடுமுறை என்பதால், வீட்டிலேயே விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுவன், கடந்த 15ஆம் தேதி பிற்பகலில் தனது இரு நண்பர்களுடன் இருகூர் மாசாணி அம்மன் கோவில் அருகே உள்ள வாய்க்காலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளான்.

ஆனால், இரவு நீண்ட நேரமாகியும் தாஸ் வீடு திரும்பாததால் பயத்தில் பதற்றம் அடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் விசாரித்துள்ளனர். மேலும், அருகிலுள்ள பகுதிகளிலும் தேடியுள்ளனர். பின்னர், தனது மகனுடன் சென்ற நண்பர்களிடம் விசாரித்துள்ளனர். அதற்கு தாஸின் நண்பர்கள், “யாரோ ஒரு மர்ம நபருடன் அவன் தனியாக சென்றான்” எனக் கூறி மழுப்பியுள்ளனர்.

இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுவனைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் உடனடியாக சிங்காநல்லூர் காவல் நிலைய போலீசாரிடம், சிறுவனைக் காணவில்லை என பதற்றத்தில் அவசரப் புகார் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, பெற்றோரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார், சிறுவனுடன் கடைசியாகச் சென்ற இரு சிறுவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் தனியாக அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது சிறுவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் போலீசாருக்கு மேலும் சந்தேகம் வலுத்தது.

தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சிறுவர்களுக்கிடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. அந்த வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த இரண்டு சிறுவர்கள், அங்கு கீழே கிடந்த காலி மதுபாட்டிலால் தாஸின் தலையில் அடித்து கொடூரமாக தாக்கியுள்ளனர். அதில், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இதனால் பயந்துபோன அந்தச் சிறுவர்கள், சம்பவத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக உடலை அங்கேயே ரகசியமாக குழி தோண்டி புதைத்துவிட்டு, யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

போலீசாரின் விசாரணையில் சிறுவர்கள் காட்டிய அடையாளத்தின்படி, இன்று (மே 18) காலை சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, புதைக்கப்பட்ட மாணவன் தாஸின் உடலை மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக மாணவனின் உடல் கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. (ESI) அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விளையாடச் சென்ற இடத்தில் இரு நண்பர்களால் ஏழாம் வகுப்பு மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இந்தத் திடுக்கிடும் சம்பவம், இருகூர் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து, அந்தச் சிறுவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ள சிங்காநல்லூர் போலீசார், கைது செய்யப்பட்ட இரு சிறுவர்களிடமும் கொலைக்கான உண்மையான காரணம் குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 13 வயது சிறுவன், நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கல் மற்றும் மதுபாட்டிலால் கொடூரமாக தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அந்த இரண்டு சிறுவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் கோவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.