ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில், 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக பள்ளியின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள உறைவிடப் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், கோடை விடுமுறைக்காக தனது வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில், பள்ளியில் இந்த வார தொடக்கத்தில் மாணவ, மாணவிகளுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அப்போது, 9ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சுமார் 5 மாத கர்ப்பமாக இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம், உடனடியாக மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, பெற்றோர் தங்களது மகளிடம் விசாரித்துள்ளனர். அப்போது, கோடை விடுமுறையின்போது தனக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை குறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூறக்கூடாது என சம்பந்தப்பட்ட நபர் தன்னை மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணையில், மாணவிக்கு பாடம் நடத்துவதற்காக நியமிக்கப்பட்டிருந்த தனியார் ஆசிரியர் ஒருவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையின்போது மாணவி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதுகுறித்து வெளியே தெரிவித்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மிரட்டியதாகவும் மாணவியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
அப்பகுதியில் நிலவிய கடுமையான வெப்பநிலை காரணமாக, உள்ளூர் அதிகாரிகள் மார்ச் மாதத்திலேயே பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை அறிவித்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த விடுமுறை காலத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதையடுத்து, குற்றச்சாட்டுக்கு உள்ளான தனியார் ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாணவி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியில் நடைபெற்ற வழக்கமான மருத்துவப் பரிசோதனையின்போது மாணவி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்