க்ரைம்

அத்தை மகளிடம் பேசியதை தடுத்ததால் ஆத்திரம்... டிரைவரின் வாயை கிழித்த16 வயது சிறுவன்...

சென்னையில் பேருந்துக்குள் பேசிக் கொண்டிருந்த காதலர்களை திட்டிய அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு வாய் கிழிந்தது. வாயைக் கொடுத்து புண்ணாக்கிய சம்பவம் என்பது இதுதானா?

மாலை முரசு செய்தி குழு

சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன், கோடம்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறான். இதே பள்ளிக்கு எதிரே உள்ள தனியார் கல்லூரியில் அவரது உறவுக்காரப் பெண் படித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் ஜூன் 3-ம் தேதியன்று வகுப்புகள் முடிந்து லிபர்ட்டி பேருந்து நிறுத்தத்தில் இருந்து வடபழனிக்கு சென்றனர். வடபழனி பணிமனையில் பேருந்து நின்றதைத் தொடர்ந்து, இருவரும் உள்ளேயே அமர்ந்து வெகுநேரமாக பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது பின்னால் நின்றிருந்த அரசுப் பேருந்தின் டிரைவர் ஒருவர் இருவரையும் பார்த்து, படிக்கும் வயதில் இப்படி உட்கார்ந்து கொண்டு வெகு நேரமாக பேசிக் கொண்டிருக்கிறீர்களே... உங்களுக்கு வேற வேலை இல்லையா என அதட்டல் தொனியில் கேட்டார்.

இதற்கு அந்த சிறுவன், நான் என் அத்தை மகளிடம் பேசுகிறேன். நீ யார் என கூற, இதனால் கோபமடைந்த டிரைவர் தகராறில் ஈடுபட்டார். அப்போது கடும் கோபமடைந்த சிறுவன், டிரைவரின் வாயிலேயே குத்து குத்து என குத்தினார். இதில் டிரைவரின் வாய் கிழிந்து ரத்தம் குபுகுபுவென கொட்டியது.

இதையடுத்து சக பேருந்து டிரைவர்கள், நடத்துநர்கள் சிறுவனைக் கண்டித்ததோடு, காயமடைந்தவரை ஆம்புலன்சை வரவழைத்து அதில் ஏற்றி அனுப்பினர். மேலும் ஓட்டுநரை தாக்கியதைக் கண்டித்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவம் குறித்து வடபழனி போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேசிய நிலையில், டிரைவர் மற்றும் சிறுவனின் பெற்றோர் இருவரும் சமாதானம் செய்வதாக கூறினர்.

படிக்கும் வயதில் இதுவெல்லாம் தேவையா என சிறுவனுக்கு அறிவுரை கூறப் போக, வாயைக் கொடுத்து புண்ணாக்கிய கதையாக மாறிப் போனதுதான் சோகம்..