க்ரைம்

மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் வழக்குப்பதிவு...! ஆத்திரத்தில் கார்களை உடைத்து கலாட்டா...!

Malaimurasu Seithigal TV

சென்னை தி.நகர், ஜி.என் செட்டி சாலை, தியாகராயா சாலை பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகளை இரு மர்ம நபர்கள் கல்லால் அடித்து உடைப்பதாக பாண்டி பஜார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடம் சென்று மதுபோதையில் கார்களின் கண்ணாடிகளை கல்லால் அடித்து உடைத்துக்கொண்டிருந்த இருவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இருவரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல் (22) மற்றும் மலேசிய நாட்டவரான தமீம் ராஜ் (26) என்பது தெரியவந்தது. 

மேலும், அந்த இருவரும் நேற்று நள்ளிரவு ஜெமினி மேம்பாலம் வழியாக வந்துகொண்டிருந்த போது தேனாம்பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்வம் வாகனத் தணிக்கை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், அவர்களை மடக்கிப் பிடித்து சோதனை செய்தபோது இருவரும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது தெரியவந்தது.  அதனால் அவர்கள் மீது மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக வழக்குப்பதிவு செய்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்வம் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட ரசீதை வழங்கி இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அந்த இரு இளைஞர்களும் போக்குவரத்து காவல் ஆய்வாளரிடம் பறிமுதல் செய்த இருசக்கர வாகனத்தை திரும்பத் தருமாறு தொல்லை கொடுத்துள்ளனர். ஆனால் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்வம் அவர்களிடம் வாகனத்தின் சாவியை கொடுக்காமல் அனுப்பி வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் நடந்து செல்லும் வழியில் தி.நகர் ஜி.என் செட்டி சாலை, தியாகராயா சாலை பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட கார்களின் முன்பக்க கண்ணாடிகளை கல்லால் அடித்து உடைத்து சேதப்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் பேக்கரியில் பணியாற்றி வரும் ராகுல் மற்றும் கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் மலேசிய நாட்டவரான தமீம் ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த பாண்டி பஜார் போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.