க்ரைம்

பட்டப்பகலில் சினிமாவை மிஞ்சிய கொள்ளை! இந்தியர் சென்ற காரைச் சல்லடையாகத் துளைத்த மர்ம கும்பல்...

பட்டப்பகலில் நடைபெற்ற இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை முரசு செய்தி குழு

காலையில் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த கார் ஒன்றை வழிமறித்த ஆயுதம் ஏந்திய கும்பல், அதில் இருந்தவர்களைச் சரமாரியாகச் சுட்டுவிட்டு நகைகள் அடங்கிய பைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது. சினிமா காட்சிகளைப் போன்ற இந்தச் சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த 29 வயது இளைஞரும், அவருடன் பயணம் செய்த பெண்ணும் துப்பாக்கிக் குண்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் பக்ரானி இசா (Vijay Pagrani Iza) என்ற 29 வயது இந்தியர் மற்றும் 35 வயதான பெரு நாட்டைச் சேர்ந்த மாரி நட்டலி மிராண்டா எஸ்பினோசா (Mari Nataly Miranda Espinoza) ஆகிய இருவரும் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் நகைப் பொட்டலங்கள் அடங்கிய பைகள் மற்றும் பெட்டிகளை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து வந்ததாகச் சந்தேகிக்கப்படும் மர்ம நபர்கள், திடீரென காரைச் சுற்றிவளைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தென் அமெரிக்க நாடான பெருவின் காலாவோ (Callao) பகுதியில் அமைந்துள்ள லா பெர்லா மாவட்டத்தில், கோஸ்டா வெர்டே (Costa Verde) நெடுஞ்சாலைக்கு அருகே வெள்ளிக்கிழமை காலை சுமார் 6.30 மணியளவில் நடந்துள்ளது. சாண்டா ரோசா மலைப்பகுதிக்கு அருகில், ஜார்ஜ் சாவேஸ் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி இருவரும் சென்று கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல வாகனங்களில் வந்த ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள், அவர்கள் பயணித்த கருப்பு நிற எஸ்யூவி காரைச் செல்ல முடியாதபடி வழிமறித்துள்ளனர். பின்னர் காரின் கதவுகள் மற்றும் ஜன்னல்களைக் குறிவைத்து 30-க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கியால் சுட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காரை முட்டித் தள்ளி, அதன் கதவுகளை வலுக்கட்டாயமாகத் திறந்த கொள்ளையர்கள், உள்ளே இருந்த பைகள், சூட்கேஸ்கள் மற்றும் பிரீஃப்கேஸ் போன்ற பெட்டிகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் விஜய் மற்றும் அவருடன் இருந்த பெண் இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர்கள் அருகிலுள்ள சான் யூதாஸ் ததேயோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருவரும் ஆபத்தான கட்டத்தைக் கடந்துவிட்டதாகவும், அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலாவோ காவல்துறைப் பிராந்தியத் தலைவர் ஜெனரல் ஓல்கர் பெனாவிடெஸ், இந்தச் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொள்ளையாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் முன்கூட்டியே கண்காணிக்கப்பட்டு, அவர்களின் பயணத்தை அறிந்துகொண்டு கும்பல் செயல்பட்டிருக்கலாம் என்பதே போலீசாரின் முக்கிய சந்தேகமாக உள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட பெட்டிகளில் தங்க நகைகள் இருந்ததாகவும், தங்கக் கட்டிகள்கூட இருந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், வாகனத்தில் உண்மையில் என்ன பொருட்கள் இருந்தன என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. அதைக் கண்டறிவதே விசாரணையின் முக்கியப் பகுதியாக உள்ளது.

தாக்குதலுக்குப் பிறகு தப்பிச் சென்றவர்கள் சில செல்போன்களை கோஸ்டா வெர்டே பகுதியில் வீசியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்தக் கருவிகளை மீட்டு, தாக்குதலுக்கு முன்பு யாருடன் தொடர்பு கொண்டனர் என்பதை அறியத் திட்டமிட்டுள்ளனர். மேலும், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள், பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட ஆதாரங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தியர் ஒருவர் வெளிநாட்டில் பட்டப்பகலில் குறிவைக்கப்பட்ட இந்தச் சம்பவம், திட்டமிட்ட கொள்ளைக் கும்பல்களின் செயல்பாடுகள் குறித்த பாதுகாப்புக் கவலையை மீண்டும் எழுப்பியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.