க்ரைம்

ஒரு சிக்கன் பக்கோடாவால் நிகழ்ந்த விபரீதம்...!

Tamil Selvi Selvakumar

சென்னை புளியந்தோப்பில்  சிக்கன் பக்கோடா தராதவரை கத்தியால் குத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். 

பக்கோடா கேட்ட குடிகாரர்கள்:

சென்னை புளியந்தோப்பு அங்காளம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். 34 வயதான இவர் ஸ்டீல் பட்டறையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய சுரேஷ்,  வீட்டிற்கு சிக்கன் பகோடா வாங்கிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த 3 பேர் அவரிடம் சிக்கன் பகோடா கேட்டுள்ளனர்.  

கத்தி குத்து:

ஆனால், சுரேஷ் பக்கோடாவை கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் சுரேசை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றனர். இவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சுரேஷின் மனைவிக்கு தகவல் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுரேஷின் மனைவி உடனடியாக சுரேஷை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். 

போலீசார் வழக்குப்பதிவு:

பின்னர் இதுதொடர்பாக வழக்கு பதிந்த போலீசார், கத்தி குத்து நிகழ்ந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த சிசிடிவியை காட்சிகளை கொண்டு  சந்தோஷ்குமார் மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோரைக் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, ஜங்கிலி கணேஷ் என்ற ரவுடியைத் தேடி வருகின்றனர். ஒரு பக்கோடாவுக்காக நிகழ்ந்த இந்த கத்திக்குத்து சம்பவம் அப்பகுதியில் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியது.