ஹாங்காங்கில் டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான 14 வயது சிறுமியைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில், ஆசிரியர், தீயணைப்பு வீரர், பொறியியல் பயிற்சி மாணவர், யூடியூபர் உள்ளிட்ட 6 பேருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் வயது தெரிந்திருந்தும், அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதுடன், பல்வேறு வகைகளில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் ஹாங்காங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
SCMP பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தச் சம்பவங்கள் அனைத்தும் கடந்த 2023-ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் நடைபெற்றுள்ளன. அப்போது 14 வயதுடைய சிறுமி ஒருவர், டேட்டிங் ஆப்பை பயன்படுத்தியுள்ளார். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட வெவ்வேறு வயதுடைய 6 ஆண்கள், சிறுமியிடம் நெருக்கமாக பழகி, அவரைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் கடந்த நவம்பர் 26-ம் தேதி ஹாங்காங் உயர் நீதிமன்றத்தில் தண்டனை அறிவிக்கப்பட்டது. இதில் ஒருவர் விசாரணைக்கு முன்பே தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், மற்ற 5 பேரும் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் முதலில் குற்றத்தை ஒப்புக்கொண்டவர் 40 வயதான ஆசிரியர் மான் கா-விங் என்பவர். இவர், 16 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் சட்டவிரோத பாலியல் உறவு கொண்டது, சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டது மற்றும் ஆபாச வீடியோக்களை எடுத்தது என மொத்தம் 3 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார். சிறுமிக்கு 14 வயது என்பது தெரிந்திருந்தும், அவரைச் சந்திக்கும்போது பள்ளிச் சீருடையுடன் வருமாறு ஆசிரியர் கேட்டுள்ளார். மேலும், சிறுமியை நிர்வாணமாக இரண்டு புகைப்படங்களும் எடுத்துள்ளார். இதையடுத்து, குற்றத்தை ஒப்புக்கொண்டதற்காகத் தண்டனையில் மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டு, அவருக்கு 20 மாதங்கள் மற்றும் 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
24 வயதான பொறியியல் பயிற்சி மாணவர் என்ஜி கை-சிங், சிறுமிக்கு பாடம் சொல்லித் தருவதாக கூறி அவரிடம் நெருக்கமாக பழகியுள்ளார். இதற்குப் பதிலாகப் பாலியல் உறவுக்கு அவர் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. கல்வி உதவி கிடைக்கும் என்ற சிறுமியின் எதிர்பார்ப்பைப் பயன்படுத்தி, அவரைத் தவறாக வழிநடத்தியதாக நீதிபதி தெரிவித்தார். இந்தச் செயலுக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அவருக்கு 30 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தார்.
இந்த வழக்கில் அதிகபட்ச தண்டனையைப் பெற்றவர் 31 வயதான தீயணைப்பு வீரர் சோ கிட்-டிங். இவர் சிறுமியுடன் பலமுறை பாலியல் செயல்களில் ஈடுபட்டுள்ளார். அப்போது சிறுமி வலியை வெளிப்படுத்தியபோதும், தொடர்ந்து கட்டாயப்படுத்தியுள்ளார். அவருக்கு 54 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தார் நீதிபதி.
இந்த வழக்கில் தொடர்புடைய 28 வயதான யூடியூபர் வோங் பாக்-ஹாங் என்பவரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இவர் மீது குழந்தையிடம் தகாத முறையில் நடந்துகொண்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. மேலும், உடல்ரீதியான காயத்தை ஏற்படுத்திய தாக்குதல் தொடர்பாக இரண்டு குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதில் ஒரு குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டாலும், மற்ற குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு 33 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதுதவிர, 28 வயதான தொடக்கப்பள்ளி ஆசிரியர் மற்றும் 33 வயதான அரசு ஊழியர் ஆகிய இருவருக்கும் தலா 30 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் சிறுமியுடன் சட்டவிரோத பாலியல் உறவு கொண்டது மற்றும் குழந்தையிடம் தகாத முறையில் நடந்துகொண்டது ஆகிய குற்றங்களில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தண்டனை அறிவிக்கும்போது, சிறுமிக்கு ஏற்பட்ட மனரீதியான பாதிப்புகள் குறித்த அறிக்கையையும் நீதிபதி சுட்டிக்காட்டினார். வீட்டில் பெற்றோரால் புறக்கணிக்கப்படுவதாகவும், பள்ளியில் சக மாணவர்களால் ஒதுக்கப்படுவதாகவும் உணர்ந்த சிறுமி, இணையத்தின் மூலம் அன்பையும் அங்கீகாரத்தையும் தேடியுள்ளார். ஆரம்பத்தில் தன்னைப் பலரும் நேசிப்பதாக நினைத்த அவர், பின்னர் அவர்களால் புறக்கணிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.
இதன் காரணமாகச் சிறுமி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதுடன், தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் எண்ணம் மற்றும் தற்கொலை எண்ணங்களாலும் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டதற்குத் தானே காரணம் எனக் குற்றவுணர்ச்சி அடைந்ததுடன், நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்தும் பதற்றமடைந்துள்ளார். ஊடகச் செய்திகள் மற்றும் இணையத்தில் பதிவிடப்பட்ட புண்படுத்தும் கருத்துகளும் அவரது மனநிலையை மேலும் பாதித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.