தற்கொலைக்கு முயன்ற தம்பதி (மணிகண்டன் - சந்தியா) 
க்ரைம்

"அவங்க மகராசனா இருக்கட்டும்.. நாங்க போறோம்.." தற்கொலைக்கு முயன்ற இளம் ஜோடி

மூன்று மாதக் கைக்குழந்தைக்கு விஷத்தை கொடுத்து விட்டு தற்கொலைக்கு முயன்ற தம்பதியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சக்தி

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி என்பவரது மகன் மணிகண்டன்.

இவருக்கு சந்தியா என்பவருடன் கடந்த ஆண்டு திருமணம் நடந்து முடிந்த நிலையில், 3 மாதங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

இந்நிலையில் தந்தை பழனிக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் விவசாய நிலத்தை உடன் பிறந்த சகோதரர் தேவன் மற்றும் தங்கராஜின் மகன் சேட்டு ஆகியோர் அபகரித்ததாக கூறப்படுகிறது.

மணிகண்டன்

5 ஏக்கர் விவசாய நிலம் பறிபோனதற்கு பெற்றோரும் ஒரு வகையில் காரணம் என நினைத்த மணிகண்டன், மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்யும் முடிவெடுத்தார்.

அதன்படி ஜூலை 23-ம் தேதியன்று மணிகண்டன் - சந்தியா ஆகியோர் தங்கள் 3 வயது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினர். அவர்களுககு சொந்தமான சிறிய சரக்கு லாரியில் அமர்ந்து கொண்டு தற்கொலை முயற்சி எடுத்தனர்.

தற்கொலைக்கு முயற்சி செய்யும் காட்சி

தங்களுக்கு சொத்து தராமல் சிலர் தடுப்பதாகவும், திருமணத்திற்கு பிறகு தங்களை வாழ விடாமல் தொல்லை செய்வதாகவும் கூறியவர்கள், உயிரை மாய்த்துக் கொள்வதாக பேசினர்.

பூச்சிக் கொல்லி மருந்தை எடுத்து தம்ளரில் கலந்த மணிகண்டன், அதனை சந்தியாவிடம் கொடுத்து குடிக்கச் செய்ததோடு, 3 மாதக் கைக்குழநதைக்கும் பால் பாட்டிலில் கலந்து ஊட்டி விட்டார்.

குழந்தைக்கு விஷத்தை கொடுக்கும் தந்தை

இந்த வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். மணிகண்டனின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால், அவரது எண் கடைசியாக காட்டிய செல்போன் டவர் இருப்பிடத்தை வைத்து விரைந்து சென்ற போலீசார் மூன்று பேரையும் பத்திரமாக மீட்டனர்.

காவல்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்ட மணிகண்டன் - சந்தியா

பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மணிகண்டன் - சந்தியா ஆகியோர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சொத்துப் பிரச்சினைக்காக இளம் தம்பதியர் செல்போனில் தற்கொலை வீடியோ பதிவு செய்து பதிவிட்ட இந்த சம்பவத்தால் தர்மபுரியில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.