தெலுங்கானா மாநிலம், விஜய நகர் மாவட்டம் கோட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் பீமராஜ்,ஜெயலட்சுமி தம்பதியர்கள் இவர்களுக்கு 23 வயதில் அக்ஷய் என்ற மகனும் 18 வயதில் அமிர்தா என்ற மகளும் இருந்தனர். அக்ஷய் படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்திருக்கிறார். இதனால் வீட்டில் அடிக்கடி தந்தை மற்றும் மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் மகளின் எதிர்காலத்திற்காக பீமராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மற்றொரு வீட்டை விற்று 1. 2 கோடி ரூபாய் பணத்தை வங்கி கணக்கில் சேமித்து வைத்திருந்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கோட்டூர் காவல் நிலையத்திற்கு சென்ற அக்ஷய் தனது தாய் தந்தை மற்றும் தங்கையை காணவில்லை என்று புகார் அளித்தார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மூவர் குறித்தும் சில தகவல்களை விசாரிக்க அக்ஷையை காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். அப்போது காரணங்களை கூறி காவல் நிலையம் வர மறுத்து அக்ஷய் போனில் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்திருக்கிறார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் தங்கை அமிர்தா வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து கர்ப்பம் அடைந்ததாகவும் அவரை கண்டித்த போது தாய் மற்றும் தந்தை இருவரும் மகளுக்கு சாதகமாக பேசி தன்னை தரக்குறைவாக பேசியதால் ஆத்திரத்தில் மூவரையும் கொன்று வீட்டில் குழிதோண்டி புதைத்ததாக தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து மூவரின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
பிரேத பரிசோதனை முடிவில் அமிர்தா கர்ப்பமாக இல்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். எனவே அக்ஷய் இடம் மேலும் போலீசார் விசாரணை செய்ததில் தந்தை பீமராஜ் வைத்திருந்த 1.2 கோடி பணம் மற்றும் தங்கை கணக்கில் இருந்த 50 லட்சம் பணத்திற்கு ஆசைப்பட்டு அவர் மூவரையும் கொலை செய்து வீட்டில் புதைத்ததும். போலீசாரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க புகாரளித்து நாடகமாடியதும் தெரியவந்துள்ளது. பணத்திற்காக வாலிபர் தாய் தந்தை மற்றும் தங்கையை கொன்று வீட்டுக்குள் புதைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்