பெங்களூருவில் வசிக்கும் 41 வயது தொலைக்காட்சி நடிகை ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், அவருக்குத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த ஒரு நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை பலமுறை எச்சரித்தும், அந்த நபர் தன் செயலை நிறுத்தவில்லை என்று புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெலுங்கு மற்றும் கன்னட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் இந்த நடிகைக்கு, கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்பு முகநூலில் 'நவீன்ஸ்' என்ற பெயரில் இருந்த கணக்கிலிருந்து Friend Request வந்தது. அதை நடிகை ஏற்கவில்லை. இருப்பினும், அந்த நபர் மெசஞ்சர் வழியாகத் தினமும் ஆபாசமான செய்திகளை அனுப்ப ஆரம்பித்துள்ளார்.
இதையடுத்து, நடிகை அந்த நபரை உடனடியாகத் ப்ளாக் செய்துவிட்டார். ஆனால், குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் விடாமல், பல புதிய கணக்குகளைத் தொடர்ந்து உருவாக்கி, நடிகைக்கு மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். வெறுமனே ஆபாசச் செய்திகள் மட்டுமல்லாமல், அவர் வெவ்வேறு கணக்குகள் மூலம் தன்னுடைய அந்தரங்க உறுப்புகளின் வீடியோக்களையும் அந்த நடிகைக்கு அனுப்பியுள்ளார்.
கடந்த நவம்பர் 1ஆம் தேதி, அந்த நபர் மீண்டும் குறுஞ்செய்தி அனுப்பியபோது, நடிகை துணிச்சலுடன் அவரை நேரில் சந்திக்க அழைத்துள்ளார். நேரில் சந்தித்தபோது, நடிகை அவரிடம் இந்தத் தொந்தரவுகளை நிறுத்தும்படி கேட்டுக் கொண்ட போதும், அவர் அதைக் கேட்க மறுத்துவிட்டார். வேறு வழியின்றி, அந்த நடிகை காவல் துறையை அணுகி, பாலியல் தொல்லை மற்றும் இணையவழித் தாக்குதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளார்.
விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் நவீன் கே மோன் என்று அடையாளம் காணப்பட்டார். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு பெரிய பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனத்தில் (Global Technology Recruitment Agency) டெலிவரி மேலாளராகப் பணியாற்றி வந்தவர் என்பது அதிர்ச்சியான தகவல். லண்டன், நியூயார்க், பாரிஸ் போன்ற பல வெளிநாடுகளிலும் கிளைகளைக் கொண்ட ஒரு நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்த நபர் இந்தக் கொடூரச் செயலைச் செய்துள்ளார். தற்போது நவீன் கே மோன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இதே பெங்களூருவில், சனிக்கிழமை அன்று மற்றொரு தனிச்சம்பவமும் நடந்தது. முப்பத்தி மூன்று வயதுப் பெண் ஒருவர், தனது நாயுடன் வழக்கமாகச் செல்லும் காலை நடைப்பயிற்சியின்போது பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார். அடையாளம் தெரியாத, சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பின்னால் இருந்து வந்து, "மேடம்" என்று அழைத்ததாகவும், அவர் திரும்பிப் பார்த்தபோது, அந்த நபர் ஆபாசமான முறையில் தனது அந்தரங்க உறுப்பைக் காட்டித் தவறாக நடந்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவத்திலும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட நபரைத் தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.