க்ரைம்

“எப்போ கூப்பிட்டாலும் தனிமையில் இருக்க வரணும்” - ஜூனியர் மாணவியை காதலித்து ஏமாற்றிய வாலிபர்.. அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டல்!

மாணவன் வசந்த் தல்லாகுளம் காவல்நிலையத்திற்கு விசாரணை வந்து சென்றதாக சொல்லப்படுகிறது...

Mahalakshmi Somasundaram

தேனி மாவட்டம், மதுரை ரிங் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் பொறியியல் படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வருபவர் வசந்த். இவர் அதே கல்லூரியில் பயிலும் ஜூனியர் மாணவி ஒருவரிடம் பழகி வந்த நிலையில் நாளடைவில் அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி நெருங்கி பழகி வந்திருக்கிறார். மேலும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தனது தாய் தனியார் பள்ளிக்கூடம் வைத்து நடத்தி வருவதாகவும் வருங்காலத்தில் நமது திருமணத்திற்கு பிறகு அதை நீ கவனித்துக் கொள்ளலாம் என்றும் ஆசை வார்த்தைகளை சொல்லி ஏமாற்றி வந்துள்ளார்.

அதனை தொடர்ந்து சில  மாதங்களுக்கு முன்பு மாணவியிடம் அந்த பள்ளிக்கூடத்தை பார்வையிடலாம் என கூறி வசந்த் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று இருவரும் தனிமையில் இருந்துள்ளார். தனிமையில் இருந்த போது அதனை மாணவிக்கு தெரியாமலே வசந்த் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். இதனை அறியாத ஜூனியர் மாணவி தொடர்ந்து மாணவன் வசந்துடன் பழகி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் வசந்திற்கு கஞ்சா போதை பழக்கம் உள்ளது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி வசந்துடனான காதலை முறித்துக் கொண்டு அவருடன் பழகுவதை தவிர்த்து வந்துள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த வசந்த் அந்த மாணவியிடம் இருவரும் தனிமையில் இருந்து வீடியோவை காண்பித்து மிரட்டியுள்ளார். மேலும் தனிமையில் இருந்த வீடியோவை இணையதளத்தில் பகிர்ந்து விடுவேன் எனவும் இதனை பார்த்தால் உங்களது குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுவார்கள் என்றும் மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் மதுரையில் உள்ள ஒரு பகுதிக்கு மாணவியை மிரட்டி வரவழைத்த வசந்த் மாணவியிடம் பேசிக் கொண்டிருந்த போது திடீரென இரும்பு கம்பியால் அவரை தாக்கியுள்ளார். இதனால் மாணவி மயக்கம் அடையவே அச்சமடைந்த வசந்த் மாணவியின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி “நான் எப்போது அழைத்தாலும் தனிமையில் என்னை சந்திக்க வேண்டும்” என மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்

இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி வீட்டில் தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் மாணவியின் தாயார் இது குறித்து விசாரித்து பின்னர் தல்லாகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் கீழ் கல்லூரி மாணவர் வசந்த் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கல்லூரி மாணவன் வசந்தை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே மாணவன் வசந்த் தல்லாகுளம் காவல்நிலையத்திற்கு விசாரணை வந்து சென்றதாக சொல்லப்படுகிறது. எனவே காவல்துறையினர் அவரை கைது செய்யாமல் தப்பிக்கவிட்டனரா? என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையில் தல்லாகுளம் காவல்நிலையம் முன்பு மாணவன் வசந்த் பைக்கில் செல்லும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேனியில் தனது ஜூனியர் மாணவியிடம் காதலிப்பதாக கூறி தனிமையில் இருந்த வீடியோவை பதிவு செய்து மிரட்டி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்த மாணவன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்