காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த நெல்வாய் கிராமத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி உத்தரமேரூர் அடுத்த மல்லிகாபுரம் கிராமத்தில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற புனித அந்தோணியார் ஆலையை தேர் திருவிழாவுக்கு தனது குடும்பத்தினருடன் வந்திருக்கிறார். திருவிழா முடிந்து வீட்டிற்கு செல்லும் போது அங்கிருந்து சிறுமி மயமானதாக சொல்லப்படும் நிலையில் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக இது குறித்து உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர். அதன் அடிப்படையில் உத்திரமேரூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது சிறுமியின் செல்போன் எண்ணிற்கு அடிக்கடி அழைப்பு வந்த ஒரு மொபைல் எண்ணை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் உத்திரமேரூர் போலீசார் ஆய்வு மேற்கொண்டதில், அந்த எண் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம், ஆளும்சேரி ஊராட்சி சேந்தாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த புண்ணியகோடி என்பவரது மகனான 45 வயதுடைய ஜீவா என்பவரது மொபைல் நம்பர் என்று தெரியவந்தது. எனவே சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவரை தேடிய போது அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. அதனை அடுத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அவரது மொபைல் எண்ணை ஆய்வு செய்தபோது அது செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்த ஜீவாவையும், அவருடன் கழுத்தில் தாலியுடன் இருந்த சிறுமியையும், உத்திரமேரூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஜீவானந்தத்திற்கு ஏற்கனவே அவரது ஊரிலேயே உள்ள 36 வயதுடைய தேவி என்ற பெண்ணுடன் திருமணமாகி கல்லூரி படிக்கும் ஒரு மகனும், பள்ளியில் படிக்கும் ஒரு மகனும், ஒரு மகளும் இருப்பது தெரியவந்தது. மேலும் இரண்டாவதாக உத்திரமேரூர் வேட்பாளையத்தைச் சேர்ந்த சுமித்ரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதில் நான்கு வயதில் ஒரு ஆண் குழந்தையும், சுமித்ரா தற்போது நான்கு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் தான் அப்பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்து இந்த ஆண்டு பதினோராம் வகுப்பு படித்து வரும் சிறுமியுடன் ஜீவானந்தத்திற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பேசி பழகி வந்த நிலையில் நாளடைவில் ஜீவா சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பலமுறை தன்னுடைய பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி தனது குடும்பத்தாருடன் உத்திரமேரூர் அடுத்த மல்லிகாபுரம் அந்தோனியார் கோவில் திருவிழாவுக்கு குடும்பத்துடன் வந்த சிறுமியை செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் கடத்திச் சென்ற ஜீவானந்தம் அங்குள்ள கோவில் ஒன்றில் சிறுமிக்கு தாலி கட்டி, அறை எடுத்து தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஜீவானந்தத்தின் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஏற்கனவே திருமணமாகி இரண்டு மனைவிகள் இருக்கும் போது 45 வயது நபர், 15 வயது பள்ளி சிறுமியை கடத்திச் சென்று தாலி கட்டி, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட சம்பவம் உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.