சென்னை பல்கலை வளாகத்தில் பர்தா அணிந்த இளைஞர் கத்திகளுடன் பிடிபட்டார். தோழியை இறுதியாக ஒரு முறை பார்த்து விட்டு தற்கொலை செய்து கொள்ள எடுத்து வந்ததாக சொன்னதால் பரபரப்பு.
சென்னை அண்ணாசதுக்கம் காவல் நிலைய போலீசார் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது பர்தா அணிந்த நபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நடந்து சென்றார். அவரை பிடித்து விசாரித்த போது, சவுகார்பேட்டையை சேர்ந்த கரண் மேத்தா(24 )என்பது தெரியவந்தது.
அவருடைய பையில் இருந்த இரண்டு கொடுவாள் மற்றும் ஒரு கத்தியை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
இதில், சவுகார்பேட்டையைச் சேர்ந்த கரண் மேத்தாவின் தந்தை உத்தம்சந்த் 8 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்துள்ளார். தாயார் சாந்தி தேவி 100 சதவீத மாற்றுத்திறனாளி. எனவே தாயாருக்கு அனைத்துவிதமான உதவிகளையும் கரண் மேத்தா தான் செய்து வருகிறார்.
இவரது சகோதரிக்கு திருமணமாகி ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். கரண் மேத்தாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் தான் அவரது குடும்பத்தினருக்கு உதவிகள் செய்து வருகிறார் என தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், கரண் மேத்தா அரும்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் மாதம் 72 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
ஷேர் மார்க்கெட் முதலீடு, ஆன்லைன் சூதாட்டம் என 24 லட்சம் வரை பணத்தை இழந்துள்ளார். நண்பர்களிடம் வாங்கிய கடனை அடைப்பதற்காக தனியார் வங்கியில் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, மாதந்தோறும் இஎம்ஐ செலுத்தி வந்துள்ளார்.
ஆன்லைன் மூலம் சிஏ படித்து வந்த கரண் மேத்தா, தேர்வுக்கு படிப்பதற்காக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு நின்றுள்ளார்.
இருப்பினும் சொந்த செலவுக்காக Fast moving -ல் எந்த பொருள் உள்ளதோ அதை வாங்கி ஆன்லைனிலும் விற்பனை செய்து வந்துள்ளார்.
இன்கம் டேக்ஸ் ரிட்டன் பைல் செய்வது, ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட வேலையும் பகுதி நேரமாக செய்து வந்துள்ளார்.
ஆனாலும் ஆன்லைன் சூதாட்டம் ,ஷேர் மார்க்கெட் முதலீட்டில் பணத்தை இழந்ததன் காரணமாக அவரால் பொருளாதார ரீதியாக உயர முடியவில்லை. இந்த நிலையில் நேற்று ஆன்லைன் சூதாட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய் பணம் இழந்துள்ளார் என கூறப்படுகிறது.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழப்பு, கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மன அழுத்தத்துக்கு ஆளான கரண் மேத்தா, தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். இதையடுத்து சென்னை பல்கலைக்கழகத்தில் படிக்கும் தனது தோழியை பார்த்து பேசிவிட்டு , தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார்.
வீட்டில் இருந்த இரண்டு கொடுவாள்கள் மற்றும் ஒரு கத்தியை எடுத்து பையில் வைத்துக் கொண்டு, பர்தா அணிந்து சென்னை பல்கலைக்கழக வளாகத்துக்கு வந்தபோதுதான் ரோந்து போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
எதற்காக பர்தா அணிந்து வந்தாய் என போலீசார் கேட்டபோது.... ஆன்லைனில் விற்பனைக்காக வைத்திருந்ததை அணிந்து வந்தேன்.
தோழியை பார்த்துவிட்டு, ஏதாவது ஒரு மரங்கள் நிறைந்த மறைவான இடத்துக்கு சென்று கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தேன். அழுகி, துர்நாற்றம் வீசிய பிறகுதான் எனது உடலை எடுக்க போலீசார் வருவார்கள்.
பர்தா அணிந்திருப்பதால் போலீசாருக்கு சற்று குழப்பம் வரும்.
( போஸ்ட் மாடம் அறிக்கையை வைத்து போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள்) நான் இறந்தது தாயாருக்கு தெரியக்கூடாது என்பதற்காக இப்படி விபரீதமாக யோசித்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
கரண் மேத்தா மீது ஆயுத தடைச் சட்டம், ஆள் மாறட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்த அண்ணா சதுக்கம் போலீசார், அவரை எழும்பூர் நீதிமன்ற தலைமை நடுவர் பாண்டியன் முன் ஆஜர்படுத்தினர்.
கரண் மேத்தாவுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கி, உறவினர் ஒருவருடன் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வருமாறு தலைமை நடுவர் உத்தரவிட்டார்.
அதற்கான ஏற்பாடுகளை அண்ணா சதுக்கம் போலீசார் செய்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.