உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள சிகந்தரா என்ற இடத்தில் வசித்து வந்தவர் சுரேந்திரா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரூபி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழில் செய்து வந்த சுரேந்திரா குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த ரூபி கணவனை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.
அதன்படி கடந்த (மே 26) ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளை அவரது சித்தப்பா வீட்டிற்கு அனுப்பி வாய்த்த ரூபி கணவனுக்கு பாயசத்தில் மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்திருக்கிறார். பின்னர், அவர் பாயசத்தை குடித்து மயக்கமடைந்த உடன் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். தொடர்ந்து உடலை மறைக்க நினைத்த ரூபி அவரது வீட்டின் கழிவறையில் குழி தோண்டி கணவனின் உடலை புதைத்து விட்டு மறுநாள் காலை அவரை காணவில்லை என காவல் துறையினரிடம் புகாரளித்திருக்கிறார். மேலும் உண்மையாகவே கணவன் காணாமல் போனது போல அக்கம் பக்கத்தினரை நம்பவைக்க சோகமாக இருப்பது போல நடித்து வந்திருக்கிறார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில் சுரேந்திரா கடைசியாக அவரது வீட்டிற்கு சென்றது தெரியவந்துள்ளது. எனவே மனைவி ரூபி மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்திருக்கிறார். இதன் காரணமாக ரூபி மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்த நிலையில் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது அவர் கணவனை கொலை செய்ததையும் உடலை கழிப்பறையில் குழி தோண்டி புதைத்ததும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இதன் அடிப்படையில் வீட்டிற்கு சென்று 45 நாட்களுக்கு பிறகு உடலை கைப்பற்றிய காவல்துறையினர் ரூபி மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்திருக்கின்றனர். மேலும் ரூபி ஒருவரால் மட்டுமே குழிதோண்டி உடலை புதைத்திருக்க முடியாது என சந்தேகிக்கும் போலீசார் வேறு யாருக்காவது கொலையில் தொடர்புள்ளதா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடித்துவிட்டு அடித்து துன்புறுத்திய கணவனை மனைவி கொன்று கழிப்பறையில் குழி தோண்டி புதைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.