சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). இவர் அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். ஜூலை 27-ம் தேதி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரது காரில் இருந்த 14 பவுன் நகை காணாமல் போனது குறித்து, அஜித்குமாரை அழைத்துச் சென்று மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டில் 24 லாக் அப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் தமிழகத்தில் காவல்துறை ஆட்சி நடக்கிறதா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
கோவிலுக்கு வந்த ஒரு பெண் பக்தர் ஒருவர் காரை பார்க் செய்ய தற்காலிக ஊழியரான அஜித் குமாரின் உதவியை நாடியுள்ளார். அஜித் குமாருக்கு வண்டி ஓட்ட தெரியாததால் வேறு ஒரு நபரின் உதவியுடன் காரை பார்க் செய்துள்ளார். இந்நிலையில் அந்த காரில் இருந்த 14 பவுன் நகைகள் திருடு போயுள்ளதாக கூறி, காவலாளியை விசாரிக்க வேண்டும் என காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.
தம்பியின் கண் முன்னே
இதனை அடிப்படையாக கொண்டு அஜித் குமாரின் தம்பி உட்பட 5 பேரை விசாரணைக்கு என்று அழைத்து சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் அஜித் குமாரின் தம்பியை கிட்டத்தட்ட அரைமணி நேரம் அவரின் கண்முன்னே போட்டு அடித்துள்ளனர். அப்போதும் அவர் தனக்கு ஏதும் தெரியாது எனக்கூறியுள்ளார். இதனால் கடுமையாக தாக்கியதில் அஜித் குமார் உயிரிழந்துள்ளார்.
காவல் துறை செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் வழக்கு குறித்த விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித் குமார் என்பவரின் இறப்புத் தொடர்பாக, 6 காவலர்கள் உடனடியாக சம்பவம் நடந்த அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
காவல் நிலைய மரணம் தொடர்பான வழக்குகளில் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்பட்டு உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடைமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட, பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் இரவு கிடைத்தவுடன் எந்த காலதாமதமும் இன்றி, உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன், இவ்வழக்கை கொலை வழக்காக சட்டப்பிரிவுகளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு, இச்சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வருந்தத்தக்க சம்பவத்தில், தமிழ்நாடு அரசின் காவல்துறை நியாயமான, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற முறையில் செயல்பட்டுள்ளது. கடந்த காலங்களை ஒப்பிடும்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் காவல் நிலைய மரணங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதோடு, இத்தகைய சம்பவங்கள் நடைபெறும் போது எவ்வித தயவு தாட்சண்யமும் இன்றி உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
விசாரணையின்போது அஜித்குமாரை போலீஸார் கடுமையாக தாக்கியது பிரேதப் பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது. அவரது உடலில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காயம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.