மானாமதுரை பகுதியில் கடந்த (மார்ச் 6) ஆம் தேதி நடந்த அரிவாள் தாக்குதல் சம்பவத்தில் அழகர் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட 26 வயதுடைய ஆகாஷ் டெலிசன் உட்பட 5 பேரை மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஆகாஷ் பின்னர் காவல்துறையின் விசாரணை நடைமுறையில் இருந்து தப்ப முயன்றதாகவும், அப்போது பாலத்தில் இருந்து குதித்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகின. இதையடுத்து அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி (மார்ச் 8) ஆம் தேதி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் மருத்துவர்கள் தரப்பில் அவரது மரணத்துக்கு மூச்சுத்திணறல் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல் கூறப்பட்டது. இந்த மரணம் குறித்து போலீசார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஆகாஷின் மரணம் காவல் மரணமாக இருக்கலாம் என உறவினர்கள் அவரது உடலை வாங்காமல் நீதி விசாரணை வேண்டும் என வலியுறுத்தி மதுரை–ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் போராட்டத்தை கைவிட கூறிய நிலையில் அவர்கள் தொடர்ந்து உடலை வாங்காமல் மூன்று மாதங்களாக பாரதத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையில், ஆகாஷின் தந்தை ராஜேஷ்கண்ணன் மதுரை அமர்வில் ஒரு மனுவை தாக்கல் செய்தார் அதில், தனது மகன் மரணத்திற்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறையினர் மீது எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி உடனடியாக இந்த வழக்கை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். அதன் படை நேற்று முன்தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையில் இருந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் மனுதாரர்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்ட பின்னரும் உடலை வாங்காமல் இருப்பது சரியில்லை என கூறினார். அப்போது வாதாடிய ஆகாஷ் தரப்பு வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்காமல் இருக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரித்த நீதிபதி பிரேத பரிசோதனைகள் மற்றும் முறையான மருத்துவ ஆய்வுகள் முடிந்த பின்னரும் உடலை வைத்திருப்பது நியம இல்லை எனவே இன்று (ஜூன் 15) மாலை ஆகாஷ் குடும்பத்தினர் உடலை வாங்கவில்லை எனில் அரசு தரப்பில் உடலை தகனம் செய்ய உத்தரவிடப்படும் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆகாஷின் குடும்பத்தினர் உடலை வாங்காத காரணத்தால் “சட்டப்படி தேவையான நடைமுறைகள் அனைத்தும் முடிந்த பின்னும் ஒரு உடலை உறவினர்கள் ஏற்காத நிலை ஏற்பட்டால், அந்த உடலை அரசு செலவில் உரிய முறையில் அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவோ அரசுக்கு அதிகாரம் உண்டு. அந்த வகையில், ஆகாஷ் டெலிசனின் உடலை கண்ணியமான முறையில் இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்” என உத்தரவிட்டார் அதன்படி இன்று காலை ஆகாஷின் மத வழக்கப்படி, உரிய மரியாதையுடன் மாவட்ட நிர்வாகமே இந்த இறுதிச் சடங்குகளை முன்னின்று நடத்தி அவரது உடலை தகனம் செய்தது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.