Ambur Balachandran Death 
க்ரைம்

“வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்த மனைவி” - இரவு முழுவதும் நடந்த தகராறு.. மாமியார் வீட்டில் சடலமாக கிடந்த வாலிபர்!

தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது...

Mahalakshmi Somasundaram

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகன் 26 வயதுடைய பாலச்சந்திரன். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த காவியா என்ற பெண்ணுடன் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் பாலச்சந்திரன் ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள ஸ்டிக்கர் கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். அதேபோல், புதிய மின்னூர் ராமர் கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் 36 வயதுடைய வசந்த், ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு லாவண்யா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில், வசந்துக்கும் காவியாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆட்டோவில் செல்லும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதுகுறித்து பாலச்சந்திரனுக்கு தெரியவந்த நிலையில், அவர் தனது மனைவி காவியாவிடம் இதுதொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனிடையே, நேற்று இரவு பாலச்சந்திரனுக்கும் வசந்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அது பின்னர் கைகலப்பாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இதில் பாலச்சந்திரன் தாக்கியதில் காயமடைந்த வசந்த், தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே அவரது மாமியார் வீட்டில் இருந்த பாலச்சந்திரன் இன்று காலை தனது மாமியார் வீட்டில் இருந்த சிமெண்ட் கூரையின் கம்பியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த காவியா, அவரை மீட்டு ஆட்டோ மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பாலச்சந்திரனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் நகர காவல்துறையினர் மருத்துவமனைக்கு சென்று பாலச்சந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலச்சந்திரனின் உயிரிழப்புக்கு திருமணத்தை மீறிய உறவு விவகாரம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.