க்ரைம்

போலீஸ் வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு...!

Malaimurasu Seithigal TV

அண்ணா சதுக்கம் அருகே போலீஸ் வாகனம் மோதியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் கிலிகுப்பம் பகுதியை சேர்ந்த மேரி என்ற மூதாட்டி, அண்ணா சதுக்கம் அருகே சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற போலீஸ் வாகனம் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மூதாட்டி மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றிய போலீஸார், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், விபத்துக்கள் குறித்தும், வேகத்தடை குறித்தும் விழிப்புணர்வு செய்யும் போலீசாரின் வாகனமே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதியது இணையவாசிகளிடையே விவாத பொருளாக மாறியுள்ளது.