க்ரைம்

"ஐயோ அம்மா, விட்டுடுங்க" சிறைக்குச் செல்ல மறுத்து, வாசலில் கதறிய இந்து சேனா பிரமுகர்!

Malaimurasu Seithigal TV

நன்கொடை கேட்கச் சென்றபோது ஆவேசமாகப் பேசிய இந்து சேனா பிரமுகர், சிறைக்குச் செல்ல மறுத்து சிறு குழந்தைபோல் கதறி அழுத சம்பவம் அரங்கேறியுள்ளது.

நாகர்கோவிலிலுள்ள தென்னிந்திய திருச்சபையின் நிர்வாகத்தின்கீழ் இயங்கும் கல்லூரிக்கு நேற்று முன்தினம் இந்து சேனா அமைப்பின் நிர்வாகிகள் மூன்று பேர் சென்றிருக்கின்றனர்.

கல்லூரி நிர்வாக அலுவலகத்துக்குச் சென்ற அவர்கள், `விநாயகர் சதூர்த்தி விழாவுக்கு நன்கொடை வேண்டும்' எனக் கேட்டிருக்கின்றனர். அங்கு நின்ற வேறு சிலர், `நீங்கள் மேற்கு மாவட்டத்தில் விநாயகர் சதூர்த்தி விழா கொண்டாட இங்கு வந்து ஏன் நன்கொடை கேட்கிறீர்கள். இங்கிருக்கும் நிர்வாகிகளை வரச் சொல்லுங்கள்? எனக் கூறியிருக்கின்றனர். அதற்கு அந்த நிர்வாகிகள் தகராறு செய்திருக்கின்றனர். 

இதையடுத்து அங்கிருந்தவர்கள் இந்து சேனா நிர்வாகிகளை வீடியோ எடுத்திருக்கின்றனர். அப்போது இந்து சேனா நிர்வாகிகள் "நீ எனப் பேசாதீங்க, `ஜி'னு சொல்லுங்க. கணபதியைப் பற்றிக் குற்றம் சொல்லுறீங்க இல்லியா..." எனக் கேட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர் சுசீலா, வடசேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், இந்து சேனா தலைவரான குழித்துறை பெருந்தெருவைச் சேர்ந்த பிரதீப்குமார் என்ற மணிகண்டன் (40), சிதறால் துண்டத்துவிளையைச் சேர்ந்த பிரதீஷ் (36), பாகோடு கழுவன்திட்டை கொட்டாரக்கரைவீட்டைச் சேர்ந்த மூர்த்தி (50) ஆகிய மூன்று பேர்மீது வழக்கு பதிவுசெய்தனர். இந்த வழக்கில் பிரதீஷை போலீஸார் நேற்று கைதுசெய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை நாகர்கோவில் சப் ஜெயிலில் அடைக்கக் கொண்டு சென்றனர்.

போலீஸ் வாகனத்தில் சென்ற பிரதீஷ், சிறைச்சாலைக்கு முன்பு அமர்ந்து சிறைக்குள் வர மாட்டேன் என்று அடம்பிடித்துள்ளார். போலீசார் அழைத்த போது சிறை வாசலில் அமர்ந்து திடீரெனத் தரையில் அமர்ந்து கதறி அழுதார். இதனால் செய்வதறியாமல் திகைத்த போலீஸார், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். 

ஆனாலும், அவர் சிறைக்குள் செல்லாமல் அடம்பிடித்துள்ளார். போலீசார் அவரைப் பிடித்து இழுத்து சிறைக்குள் கொண்டு சென்றனர். அப்போது அவர், 'ஐயோ அம்மா, என்னைவிட்டு விடுங்கள்' என்று அழுது, அடம்பிடித்து கூச்சலிட்டுள்ளார். இதனால் சப் ஜெயில் முன்பு இருக்கும் சாலை வழியாகச் சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். நன்கொடை கேட்கச் சென்றபோது ஆவேசமாகப் பேசிய அவர், சிறைக்குச் செல்ல மறுத்து சிறு குழந்தைபோல் கதறி அழுத சம்பவம் போலீஸாருக்குச் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "பிரதீப் குமார் என்பவர் ஏற்கெனவே ஓர் இந்து அமைப்பிலிருந்து பிரிந்து, தனியாக இந்து சேனா என்ற அமைப்பைத் தொடங்கியிருக்கிறார். அவர் விநாயகர் சதூர்த்தி விழா நடத்துவதற்காக நன்கொடை கலெக்‌ஷன் செய்வதற்காகச் சிலரை அழைத்திருக்கிறார். அதில், இந்துத்துவத்தில் ஈடுபாடுள்ள பிரதீஷை தன்னுடன் அழைத்திருக்கிறார். கூலி வேலைக்குச் செல்வதாகக் கூறிய பிரதீஷுக்குச் சம்பளம் தருவதாகக் கூறி அவரை அழைத்துச் சென்றதாகவும், சென்ற இடத்தில் பிரச்னை ஆனதால் இப்படிச் சிக்கிவிட்டதாகவும் தெரியவந்திருக்கிறது. தலைமறைவாக இருக்கும் மற்ற இருவரையும் தேடிவருகிறோம்" என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.