க்ரைம்

கடனாளியை பிடிக்க புதிய யுக்தியை கையாண்ட ஆன்லைன் லோன் ஆப் நிறுவனம்...! என்ன ப்ளான் அது..?

Malaimurasu Seithigal TV

பொதுவாக மக்கள் தங்களுக்கு பொருளாதார ரீதியாக சிரமம் ஏற்படும் போது வங்கிகளை நாடுவது வழக்கம். அந்த வகையில் ஒருவர், ஆன்லைன் லோன் ஆப் நிறுவனத்திடம் கடன் பெற்றுள்ளார். அந்த கடனை திருப்பி செலுத்தாமல் தலைமறைவானதால், கடனாளியை பிடிப்பதற்காக அந்த நிறுவனம் ஒரு யுக்தியை கையாண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி காவல் கட்டுப்பாட்டு அறையை நேற்று தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், ஐயப்பந்தாங்கல் முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வரும் சபீர் என்பவர் வீட்டில் வெடிகுண்டு தயாரிப்பதாகக் கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார். அதனைத் தொடர்ந்து உடனடியாக இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடம் சென்ற போலீசார், மர்ம நபர் கூறிய முகவரியில் இம்ரான் என்பவர் வசித்து வருகிறார். அவர் வீட்டில் சோதனையிட்டனர். 

அந்த சோதனையில் வீட்டில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான எந்தவித அறிகுறியும் தென்படாததால் மர்ம நபர் கூறியது புரளி என்பது போலீசாருக்கு தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மர்ம நபர் தொடர்பு கொண்ட செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்ததில் அழைப்பு ஜப்பானில் இருந்து வந்துள்ளதும், ‘இயர்லி சாலரி’ என்ற ஆன்லைன் லோன் ஆப் நிறுவனத்தினர் அழைப்பில் பேசியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

அதேபோல சோதனை மேற்கொண்ட வீட்டில் வசித்து வரும் இம்ரான் என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மர்ம நபர் கூறிய சபீர் என்ற நபர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்து வீட்டை காலி செய்து புழல் பகுதிக்கு குடிபெயர்ந்து சென்றது தெரியவந்தது.

பின்னர் புழல் பகுதியில் வசித்து வரும் சபீரை தேடிப் பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், தான் ஐயப்பந்தாங்கலில் வசித்து வந்தபோது ‘இயர்லி சாலரி’ என்ற ஆன்லைன் லோன் ஆப் மூலம் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதன் பிறகு தனக்கு விபத்து ஏற்பட்டதால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அந்த ஆன்லைன் லோன் ஆப் நிறுவனம் பலமுறை தன்னை தொடர்பு கொண்டு கடனை கேட்டு தொல்லை கொடுத்து வந்ததால், வேறு வழியின்றி, தான் வேறு வீட்டிற்கு குடிபெயர்ந்து சென்றதாகவும் போலீசாரின் விசாரணையில் சபீர் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, அந்த ஆன்லைன் லோன் ஆப் நிறுவனம் தன்னிடம் இருந்து கடனை திரும்பப்பெற பல வழிகளை கையாண்டும், தன்னை பிடிக்க முடியாததால் தற்போது, தான் வெடிகுண்டு செய்வதாகக் கூறி புரளியை கிளப்பியுள்ளதாகவும் சபீர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சம்மந்தப்பட்ட ஆன்லைன் லோன் ஆப் நிறுவன அதிகாரிகளிடம் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக மாங்காடு காவல் துறையினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபகாலமாக ஆன்லைன் லோப் ஆப் நிறுவனங்கள் பல மோசடிகளில் ஈடுபட்டும், அதிக வட்டி கேட்டு லோன் வாங்குபவர்களை ஆபாச புகைப்படங்களாக சித்தரித்து மிரட்டியும் பணப் பறிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், பலர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பங்களும் அரங்கேறி வருகிறது. தற்போது வாடிக்கையாளர் குறித்து வெடிகுண்டு தயாரிப்பதாக ஆன்லைன் லோன் ஆப் நிறுவனம் ஒன்று புரளியை கிளப்பி விட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.