சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சிவா அவருடைய மனைவி மோனிஷா. மோனிஷாவின் தம்பி மனைவிக்கும் அதே பகுதியில் வசித்து வரும் லட்சுமி என்பவரின் மகனுக்கும் திருமணத்தை மீறிய கள்ள உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதனை நேற்று மோனிஷாவும் அவரது கணவர் சிவாவும் தட்டி கேட்டு இந்த உறவை கைவிடுமாறு கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி மற்றும் அவரது ஐந்து மகன்கள் நண்பர்களோடு சேர்ந்து கஞ்சா போதையில் மோனிஷாவையும் சிவாவையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அவர்களின் இரு சக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தி வீட்டில் உள்ளே இருந்த பொருட்களை அடித்து உடைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக சிவா மற்றும் அவரது மனைவி மோனிஷா புகார் அளிக்க சென்றுள்ளனர். போலீசார் புகாரை ஏற்க மறுத்துள்ளனர். அதையடுத்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி மோனிஷா மற்றும் அவர்கள் வசிக்க கூடிய அக்கம் பக்கத்தினர் என பெண்கள் உட்பட சுமார் 50 க்கும் மேற்பட்டோர் சேர்ந்து எர்ணாவூர் சந்திப்பில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், “போலீசாரிடம் தாங்கள் புகார் அளித்தால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றும் “உங்கள் விஜய்யை எங்களுக்கு முழு சுதந்திரம் தர சொல்லுங்கள் என்றும் கோஷமிட்டனர். இந்த பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை போன்றவை ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வந்ததாகவும்,அது குறித்து மோனிஷாவும் சிவாவும் புகார் அளித்ததற்கு எதிராகத்தான் இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தினால் சுமார் ஐந்து கிலோ மீட்டர் அளவில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் இந்த பகுதியில் கஞ்சா போதைப் பொருட்கள் இருக்காத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் நிலையம் வாருங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்றும் கூறி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்