க்ரைம்

குற்றவாளியை கடத்த முயற்சி- சந்தேகத்தின்படி மூவர் கைது!

 சென்னையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியை காரில் கடத்த முயன்றதோடு, அவரை பீர் பாட்டிலால் குத்தி காயம் ஏற்படுத்திய சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மெற்கொண்டு வருகின்றனர்.  

Malaimurasu Seithigal TV

சென்னை திருமங்கலம் வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் தினேஷ் (28). ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வரும் இவர் திருமங்கலம் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியாவார். இந்நிலையில் தினேஷ் நேற்று இரவு 9 மணியளவில் திருமங்கலம் டி.வி நகர் பகுதியில் மது அருந்திகொண்டிருந்தார்.  அப்போது ஒரு காரில் அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் தினேஷை தங்களுடன் காரில் வருமாறு அழைத்துள்ளனர். ஆனால் அவர்களுடன் செல்ல தினேஷ் மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த அந்த கும்பல் தினேஷ் குடித்துக் கொண்டிருந்த பீர் பாட்டிலைப் பிடுங்கி அவரது தலையில் அடித்து உடைத்து பின் அதே பாட்டிலால் தினேஷின் நெஞ்சுப் பகுதியில் குத்தியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த தினேஷ் அங்கிருந்து தப்பியோடி வந்த நிலையில் அவரது நண்பர்களான நரேன் மற்றும் சுரேஷ் ஆகியோரின் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். படுகாயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் ஜெ.ஜெ நகர் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான முகப்பேரைச் சேர்ந்த மூர்த்தி (எ) ரிப்பன் பிள்டிங் மூர்த்தி (32), குமணன்சாவடியைச் சேர்ந்த சயின்ஷா (18) மற்றும் மாங்காடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (25) ஆகிய 3 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.