க்ரைம்

வேலை வாங்கித்தருவதாக 80 லட்சம் மோசடி... ஏமாற்றிய ஆடிட்டரை கடத்திய 6 பேர் கைது...

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 80 இலட்சம் மோசடி செய்த ஆடிட்டர் கடத்தல்

Malaimurasu Seithigal TV
சென்னை வடபழனி பஜனை கோவில் ராஜா(49). ஆடிட்டராக பணிப்புரிந்து வரும் இவர் கடந்த 6 ஆம் தேதி இரவு தனது கார் ஓட்டுனருடன் எழும்பூர் லட்சுமி மோகன் லாட்ஜிக்கு சென்றுள்ளார். அப்பொழுது அங்கு இருந்த நபர்கள் ஆடிட்டர் ராஜாவை காரில் அடித்து கடத்திக் கொண்டு சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரின் கார் ஓட்டுனர் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் லாட்ஜில் தங்கியிருந்தது விருதாச்சலத்தை சேர்ந்த குமார்(46), விழுப்புரத்தை சேர்ந்த அலெக்ஸ், பண்ருட்டி கில்லிவாளன்(31), சுதர்சன்(35), சிவபாலன் (43), திருவண்ணாமலை(51) ஆகிய 6 பேர் என தெரியவந்துள்ளது. போலீசார் ராஜாவின் செல்போன் எண்ணை வைத்து அவர்களை எச்சரித்தவுடன் மீண்டும் ராஜாவுடன் காவல் நிலையத்தில் வந்து சரணடைந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் மின்வாரிய துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 80 இலட்சம் ரூபாயை வாங்கி கொண்டு பல மாதங்களாக வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்ததாகவும்,  பல நாட்களாக பணம் கேட்டும் தராததால் கடத்தி சென்றதும் தெரியவந்தது.
6 பேரையும் கைது செய்த போலீசார் ஆட்கடத்தல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதே போல ஆடிட்டர் ராஜாவையும் மோசடி வழக்கில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.