சென்னை கீழ்ப்பாக்கம் தியாகப்பா தெருவில் சென்னை மாநகராட்சி பள்ளி ஒன்று உள்ளது. நேற்று காலை அந்த பள்ளி அருகே உள்ள குப்பை தொட்டி ஒன்றில் சாக்கு பையில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இறந்த குழந்தையை பார்த்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் கீழ்பாக்கம் போலீசார் விரைந்து சென்று குப்பை தொட்டியில் கிடந்த ஆண் குழந்தையின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் ஆண் குழந்தை உடலை சாக்கு பையில் வைத்து குப்பை தொட்டியில் வீசி சென்ற நபர் யார்? எதற்காக வீசி சென்றார்? இறப்பா அல்லது கொலையா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குழந்தை உடலை வீசி சென்ற நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். தொடர் விசாரணையில் போலீசார் சிசிடிவி காட்சியில் பதிவான அடையாளங்களை வைத்து கீழ்ப்பாக்கம் தியாகப்பா தெருவில் வசிக்கும் தொழில் அதிபர் வீட்டில் கேர் டேக்கராக பணியாற்றி வரும் பிரியங்கா (22) என்ற இளம் பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த பிரியங்கா இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கவின் (24) என்பவரை காதலித்து வந்தது தெரியவந்தது. பின்னர் இருவருக்கும் இடையே முரண்பாடு காரணமாக காதலை முறித்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பிரியங்கா தனது ஊரில் பக்கத்து தெருவில் வசிக்கும் சந்தோஷ் (24) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 6 வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் ஒன்றாக இருந்து வந்துள்ளனர். இதனால் கடந்த 2025 ஆண்டு அக்டோபர் மாதம் இளம்பெண் பிரியங்கா கருவுற்றதாக கூறப்படுகிறது. தான் கருவுற்றதை பிரியங்கா யாரிடமும் சொல்லாமல், மருத்துவமனைக்கும் செல்லாமல் இருந்து மறைத்து வந்துள்ளார்.
இதையடுத்து கடந்த ஜூலை 27 நள்ளிரவு திடீரென பிரியங்காவுக்கு பிரசவ வலி வந்ததால் தான் வேலை செய்யும் முதலாளி வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்று ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அப்போது பிறந்த குழந்தை அழுகவே பயந்து போன பிரியங்கா என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தையின் வாய், மூக்கை கையால் அமுக்கியுள்ளார். உடனே குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. உடனே பிரியங்கா செய்வதறியாது தனது தோழியான மேரி மற்றும் தான் வேலை செய்யும் இடத்தில் பழக்கமான சிவகாமி, மணிஷா ஆகியோரை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறி ஐடியா கேட்டுள்ளார். பின்னர் அவர்கள் அளித்த அறிவுரையின் படி பிரியங்கா வீட்டில் இருந்த பிளாஸ்டிக் அரிசி பையை கொண்டு வந்து குழந்தை உடலை அதில் வைத்து கட்டி அதிகாலை (28/7/26) யாருக்கும் தெரியாமல் குப்பை தொட்டியில் வீசி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
தொடர் விசாரணையில் திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றெடுத்ததால் யாருக்கும் தெரியாமல் குழந்தையை கொலை செய்து குப்பை தொட்டியில் வீசியதாக பிரியங்கா தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பெற்ற குழந்தையை கொலை செய்து குப்பை தொட்டியில் வீசிய தாய் பிரியங்கா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் கீழ்பாக்கம் போலீசார் பிரியங்காவை பணியில் சேர்த்த தனியார் நிறுவன ஏரி இன் சார்ஜ் பாலாஜி மற்றும் பிரியங்காவின் தோழியான மேரி, சிவகாமி, மணிஷா ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்