க்ரைம்

துப்பாக்கியை மறந்த ஆம்ஸ்ட்ராங்... டெலிவரிபாய் போல வந்த கும்பல்... திக் திக் நிமிடங்கள்...

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 பேர் சரணடைந்தனர். மாநிலக் கட்சித் தலைவரை கொலை செய்ததற்கு கொலையாளிகள் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம் என்ன? இந்த சம்பவம் நடந்தது எப்படி?

மாலை முரசு செய்தி குழு

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி கோவில் தெருவில் வசித்து வந்த இவர், ஜூலை 5-ம் தேதி இரவு 7.15 மணியளவில் சடையப்பன் கோயில் தெருவில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருநதார்.

அப்போது சொமேட்டோ டெலிவரி ஊழியர்கள் போல வந்த 10 பேர் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடினர். மாநிலக் கட்சித் தலைவர் படுகொலை செய்யப்பட்ட இந்த சம்பவம், தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பெரம்பூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. சென்னை புளியந்தோப்பு நரசிம்மபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் என்பவர் கடந்த ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

7 கொலை வழக்கு உள்பட 40-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஆற்காடு சுரேஷை அவரது உதவியாளர் மாதவன் ஆகியோர் வெட்டிச் சாய்த்தனர். இந்த வழக்கில் பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது.

அதே நேரம் ஆற்காடு சுரேஷின் கொலைக்கு காரணமான மாதவன் என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மற்றொரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

ஆக, ஆற்காடு சுரேஷின் ஆதரவாளர்களே அவரது கொலைக்கு காரணமானவர்களை தேடித் தேடி கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம் என போலீசாரால் சந்தேகித்தனர். அதோடு, கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாட்டையே உலுக்கிய சட்டக்கல்லூரி மோதலில் ஆம்ஸ்ட்ராங் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கையும், மர்மகும்பல் பல நாட்களாக நோட்டமிட்டு வந்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் எப்போது எங்கிருக்கிறார்? உடன் யார் யார் உள்ளனர், அவரிடம் துப்பாக்கி இருக்கிறதா? தப்பி ஓட முடியாத இடத்தில் உள்ளாரா? என பல்வேறு கோணங்களில் நோட்டமிட்டனர்.

மேலும் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூர் சடையப்பன் கோயில் தெருவில் புதிதாக வீடு கட்டி வந்தார். இதனால் அவர் அயனாவரத்தில் தற்காலிகமாக வேறொரு வீட்டில் குடிபெயர்ந்தார்.

ஆனாலும் நாள்தோறும் மாலை நேரத்தில் பெரம்பூருக்கு சென்று தனது புதிய வீட்டின் கட்டுமானப்பணி எந்த அளவில் உள்ளது என பார்வையிட்டு வருவது அவரது வழக்கம்.

அந்த வகையில் ஜூலை 5-ம் தேதியன்று கட்டுமானப் பணியை பார்வையிட்ட ஆம்ஸ்ட்ராங், சகோதரர் வீரமணி மற்றும் பாலாஜி அகியோருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போதுதான் மர்மகும்பல் சுற்றி வளைத்து ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிக் கொலை செய்தது.

கொலை நடந்த இடத்தில் 2 நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டது. மேலும் ஆம்ஸ்ட்ராங் எப்போது வெளியே சென்றாலும் பாதுகாப்புக்காக கைத் துப்பாக்கி ஒன்றை வைத்திருப்பார் என கூறப்படுகிறது.

ஆனால் துப்பாக்கி இல்லாத நேரத்தை உன்னிப்பாக கவனித்த கும்பல் தனித்தனியாக பிரிந்து செயல்பட்டது. கொலையாளிகள் 10 பேர் ஒரே இடத்தில் கூடியிருக்க, அவர்களில் 6 பேர் தொலைவில் ஆங்காங்கே நின்றனர்.

தெருவுக்குள் யாரேனும் வருகிறார்களா? என கண்காணிப்பதற்கு 6 பேர் நிற்க, மீதி 4 பேரும், சொமேட்டோ ஊழியர்கள் போல ஆம்ஸ்ட்ராங் அருகில் சென்று அரிவாளை எடுத்து வெட்டியுள்ளனர். இதில் உடனிருந்த வீரமணி மற்றும் பாலாஜிக்கும் தலை மற்றும் முதுகில் வெட்டுக் காயங்கள் விழுந்தது.

இந்த சம்பவம் நடந்த 5 மணி நேரத்தில் கொலையாளிகள் அண்ணாநகர் துணை ஆணையர் முன்னிலையில் சரணடைந்தனர். இதில் ஆற்காடு சுரேஷின் தம்பி ஆற்காடு பாலு, பொன்னை பாலா, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் ஆகியோர் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

கைதான ஆற்காடு பாலு, தனது அண்ணன் கொலைக்கு பழி வாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். தனது அண்ணண் பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்து பரிசு வங்கியதாக ஆற்காடு பாலு பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த இந்த சம்பவத்தால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்துப் போயுள்ளது.