க்ரைம்

நடிகரிடம் பண மோசடி; பெண் வழக்கறிஞருக்கு ஜாமீன் மறுப்பு!

Malaimurasu Seithigal TV

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் நிறுவன பெண் வழக்கறிஞருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

பிரபல நடிகர் டேனியல் அருண்குமார், நோ ப்ரோக்கர் டாட் காம் செயலியின் வாயிலாக, எஸ்.டி.எஸ்.கே என்ற  தனியார் நிறுவனம் மூலம் குத்தகைக்கு வீடு தேடி வந்துள்ளார். போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை பார்த்த போது, அதை குத்தகைக்கு வழங்கவில்லை என்றும், மாத வாடகைக்கு வழங்குவதாகவும் குடியிருப்பு உரிமையாளர் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை தந்தால் அதற்கான வட்டித்தொகையை வாடகையாக தருவதாக தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை ஏற்றுக் கொண்ட நடிகர் டேனியல் அருண்குமார், பணத்தை கொடுத்து ஒப்பந்தமும் செய்து கொண்டார்.

கடந்த 2022 அக்டோபர் வரை வட்டித்தொகை 30 ஆயிரத்தை வழங்கிய அந்த நிறுவனம், அதன்பின் வட்டியை வழங்காததால் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் திணறியுள்ளார் நடிகர் டேனியல் அருண்குமார்.

வட்டியை கேட்ட போது நிறுவன இயக்குனர்கள் மிரட்டல் விடுத்ததால் டேனியல் அருண்குமார், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் செய்தூ்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், நிறுவன இயக்குனர்கள் காவ்யா, திவ்யா ஆகிய இருவரை கைது செய்தனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.  வழக்கறிஞரான திவ்யா, சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நடிகர் டேனியல் அருண்குமார் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

வழக்கு நீதிபதி ஜி.சந்திர சேகரன் முன்பு விசாரணைக்கு வந்த போது வழக்கறிஞர் வீரா ராகவன் ஆஜராகி, இதே போல மோசடி செய்ததாக இவர்கள் இருவருக்கும் எதிராக ஆவடி, பெங்களூருவில் மூன்று வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், ஜாமீன் வழங்கினால் இவர்கள் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதால் ஜாமீன் வழங்க கூடாது எனவும் வாதிட்டார்.  இதனையடுத்து ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி வழக்கின் விசாரணையை  ஆகஸ்ட் 9ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.