Bengaluru Family Mass Murder Case 
க்ரைம்

“வக்கீலிடம் பணிபுரிந்த மனைவி மீது சந்தேகம்” - அடுத்தடுத்து நடந்த 7 கொலைகளுக்கு உதவிய மகள்.. யார் இந்த கேப் டிரைவர் சங்கர்?

ஒருவரின் செல்போன் கடைசியாக சுனிதாவின் வீட்டில் இருந்ததற்கான சிக்னல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது...

Mahalakshmi Somasundaram

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரைக் கொலை செய்து, அவர்களின் உடல்களை வெவ்வேறு வனப்பகுதிகளில் வீசியதாகக் கால் டாக்ஸி ஓட்டுநர் இந்துசேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு மற்றும் சொத்துப் பிரச்சினை காரணமாக இந்தக் கொலைகள் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், அவரது 17 வயது மகளுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரை ஒரு சிறுவனின் உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதால், மற்றவர்களின் உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜாஜிநகர் 5-வது பிளாக், பாஷியம் சர்க்கிள் அருகே உள்ள 60-வது கிராஸ் பகுதியில் வசித்து வந்தவர் இந்துசேகர் (52). கால் டாக்ஸி ஓட்டுநரான இவருக்கு சுனிதா என்ற மனைவியும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சுனிதா வழக்கறிஞர் ஒருவரிடம் பணியாற்றி வந்துள்ளார். சுனிதாவின் தாயார் ரூபவதி (65). அவரது சகோதரர்கள் சங்கர் (45), சிவக்குமார் (30). சங்கரின் மனைவி நளினி (29), அவர்களது மகன் யதின் (10). சிவக்குமாரின் மனைவி திவ்யா (30), அவர்களது மகன் புனித் (7). இவர்கள் அனைவரும் பெங்களூருவின் ஸ்ரீராமபுரம் பகுதியில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சங்கர், அவரது மனைவி நளினி மற்றும் குடும்பத்தினர் திடீரென காணாமல் போயுள்ளனர். இதையடுத்து, நளினியின் தாயார் துங்கம்மா, கடந்த (நவ 3) ஆம் தேதி ஸ்ரீராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தனது மகள், மருமகன் மற்றும் பேரன் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அப்போது, காணாமல் போனவர்களில் ஒருவரின் செல்போன் கடைசியாக சுனிதாவின் வீட்டில் இருந்ததற்கான சிக்னல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, போலீசார் இந்து சேகரின் வீட்டிற்குச் சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், இந்துசேகரைத் தேடத் தொடங்கினர். தொடர்ந்து அவரைப் பிடித்து விசாரித்தபோது, போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்கள் வெளியானதாகக் கூறப்படுகிறது. தனது மனைவி சுனிதா, மாமியார் ரூபவதி மற்றும் மனைவியின் உறவினர்கள் உள்ளிட்ட பலரைக் கொலை செய்ததாக இந்துசேகர் தெரிவித்ததாக போலீசார் கூறுகின்றனர். இந்தக் கொலைகளுக்கு தனது 17 வயது மகளும் உதவியதாக அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

போலீசாரின் விசாரணையில், கடந்த அக்டோபர் 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை படிப்படியாகக் கொலைகள் நடந்ததாகத் தெரியவந்துள்ளது. முதலில் மனைவி சுனிதாவைக் கொலை செய்த இந்துசேகர், பின்னர் மாமியார் ரூபவதியை வீட்டிற்கு வரவழைத்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு, மைத்துனர் சிவக்குமார், அவரது மனைவி திவ்யா மற்றும் மகன் புனித் ஆகியோரை விருந்துக்கு வருமாறு வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது அவர்களையும் தாக்கிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து மற்றொரு மைத்துனர் சங்கர், அவரது மனைவி நளினி மற்றும் மகன் யதின் ஆகியோரையும் குறிவைத்துக் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை வீட்டில் வைத்திருக்க முடியாததால், அவற்றைச் சாக்கு மூட்டைகளில் கட்டி, காரில் எடுத்துச் சென்று வெவ்வேறு பகுதிகளில் வீசியதாக இந்துசேகர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்படி, பெங்களூரு அருகே உள்ள நந்திமலை, தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் ஏற்காடு வனப்பகுதி மற்றும் ஹாசன் அருகே உள்ள சிராடி வனப்பகுதி உள்ளிட்ட இடங்களில் உடல்கள் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, போலீசார் அந்தப் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பெங்களூரு அருகே உள்ள நந்திமலையில் நடத்தப்பட்ட தேடுதலில் சிறுவன் புனித்தின் உடல் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மற்றவர்களின் உடல்களை மீட்கும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்துசேகருக்கும் அவரது மனைவி சுனிதாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. சுனிதா ஒரு வக்கீல் இடம் வேலை பார்த்து வந்த நிலையில் இந்துசேகருக்கு மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. , இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பெங்களூரு ஸ்ரீராமபுரம் பகுதியில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் சொத்துகள் தொடர்பாகவும் குடும்பத்தினரிடையே பிரச்சினை இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி, குடும்பத்தினருடன் ஏற்பட்ட சொந்தப் பிரச்சினை காரணமாகவே கொலைகள் நடந்ததாக இந்துசேகர் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார். சொத்துத் தகராறு மற்றும் சந்தேகம் தான் கொலைக்கு காரணமா அல்லது வேறு காரணங்களும் உள்ளனவா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அவரது மகளின் பங்கு குறித்தும் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பொதுவாக மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பெங்களூருவின் குடியிருப்புப் பகுதியில், ஒரே வீட்டில் அடுத்தடுத்து பல கொலைகள் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உடல்களை காரில் எடுத்துச் சென்று வெவ்வேறு வனப்பகுதிகளில் வீசியதாகக் கூறப்படும் நிலையில், அக்கம்பக்கத்தினருக்கு இந்தச் சம்பவம் தெரியாமல் இருந்தது எப்படி என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.