திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி அருகே சின்ன வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் (21). இவர் ஓசூர் அருகே உள்ள ஜிமங்கலம் கிராமத்தில் தனியார் அட்டை கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதேபோல, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பொன்னேரி அடுத்துள்ள ராமனுார் கிராமத்தை சேர்ந்தவர் திவ்யஜேஸ்ரீ (20) இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஜி மங்கலத்தில் தான் தங்கி இருக்கும் அறையில் மற்ற நண்பர்கள் இல்லாததால் தனது காதலி திவ்யஜேஸ்ரீயை பிரதீப் தனது அறைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அங்கு இருவருக்கும் இடையே திடீரென காதல் விவகாரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பிரதீப் திவ்யஜேஸ்ரீயை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார். பின்னர் நேராக சாலைக்கு ஓடி வந்த பிரதீப் லாரி முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது லாரியின் சக்கரம் அவரது உடல் மீது ஏறி அவர் பலத்த காயமடைந்துள்ளது.
தகவலறிந்த பாகலுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த பிரதீப்பை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரதீப் உயிரிழந்துள்ளார். மேலும் காதலி திவ்யஜேஸ்ரீ உடல் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பாகலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திவ்யஜேஸ்ரீயும், பிரதீப்பும் உயிரிழந்து விட்டதால் அவர்களுக்குள் என்ன பிரச்சனை ஏற்பட்டது என போலீசாரால் கண்டறியமுடியவில்லை. பாகலுார் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்