சென்னை தாம்பரம் அடுத்த மேடவாக்கம் சின்மயா நகர் பகுதியைச் சேர்ந்தவர் 36 வயதுடைய பெண் ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜய் என்பவருக்கும் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பின்னர் இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் கணவன் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து உள்ளனர். எனவே ஷாலினி கடந்த நான்கு வருடங்களாக அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில் தனியார் கிட்ஸ் பள்ளி முதல்வராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் மேடவாக்கம் பெல் நகர் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஹரிகிருஷ்ணன் என்ற கட்டுமான தொழிலதிபருடன் கடந்த 2021 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஹரிகிருஷ்ணன் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். எனவே ஹரிகிரிஷ்ணனும் ஷாலினியும் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மற்றும் நேரில் சந்தித்து நண்பர்களாக பழகி வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஷாலினி தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வைத்து உள்ளார்.இதனைப் பார்த்து ஹரிகிருஷ்ணன் கோபமடைந்து ஷாலினியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு “உன் புருஷன் கூட இருக்குற போட்டோ எதுக்கு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போட்ட அதை டெலிட் பண்ணு” எனக் கேட்டு ஆபாசமான வார்த்தைகள் திட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் நான் என் கணவர் உடன் இருக்கும் புகைப்படத்தை ஸ்டோரியில் வைத்தால் உனக்கு என்ன பிரச்சனை என கேட்டு ஃபோனை துண்டித்ததாக தெரிகிறது.
இதில் ஆத்திரமடைந்த ஹரிகிருஷ்ணன் ஷாலினி இல்லத்திற்கு சென்று அவரை வெளியே அழைத்து உன்னிடம் பேச வேண்டும் என காரில் அமருமாறு கூறியுள்ளார். காரில் அமர்ந்த போது அவரை கழுத்தை நெரித்து வாயில் அடித்தும் மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிடவே அவரது தந்தை வெளியே வந்துள்ளார். அப்போது ஹரிகிருஷ்ணன் அங்கிருந்து காரில் தப்பி சென்று உள்ளார். இது குறித்து ஷாலினி சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த அடிப்படையில் போலீசார் ஹரிகிருஷ்ணன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.