சென்னை அடையாறு காந்தி நகர் பகுதியில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழிக்குச் சொந்தமான வணிகக் கட்டிடத்தில், பாரத ஸ்டேட் வங்கி (SBI) கிளை வாடகை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அந்தக் கட்டிடத்தில் உள்ள லிஃப்ட் பழுதடைந்து செயல்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே லிஃப்ட் பழுதை உடனடியாக சரிசெய்யுமாறு, வங்கி மேலாளர் ஹர்ஷீன்சிங் முதலில் கட்டிட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் பல நாட்கள் கடந்தும் பழுது சரி செய்யப்படாததால், அவர் நேரடியாக கட்டிட உரிமையாளரான கயல்விழியின் உதவியாளரிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து பழுது சரி செய்யப்படாமல் இருந்ததால் இதுகுறித்து நேரடியாக கயல்விழியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கயல்விழி நேரடியாக வங்கி கிளைக்கு வந்து மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கயல்விழி வங்கி மேலாளரின் கன்னத்தில் பளார் என்று அடித்து அங்கிருந்து வெளியேறியதாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவான நிலையில் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. வீடியோ வெளியாகியதைத் தொடர்ந்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து வங்கி மேலாளர் ஹர்ஷீன்சிங் அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் கயல்விழி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள், வைரலான வீடியோ மற்றும் சம்பவ இடத்தில் இருந்தவர்களின் வாக்குமூலங்களை சேகரித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் மத்திய அமைச்சரின் மகளுக்கும், வங்கி மேலாளருக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதல் சென்னை அடையாறு பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.