க்ரைம்

“கணவனை கொன்று கால்வாயில் வீசிய மனைவி” - தொடர் சித்ரவதையால் நேர்ந்த சோகம்.. சடலத்துடன் இரண்டு நாட்கள் வீட்டில் இருந்த கொடூரம்!

கால்வாயில் சடலமாக கிடந்தவர் அம்பிகாவின் கணவரான 60 வயதுடைய சந்தானம் என்பது தெரிய வந்தது....

Mahalakshmi Somasundaram

சென்னை அண்ணாநகர் கிழக்கு ஓ. பிளாக் 29 வது தெருவில் உள்ள கழிவு நீர் கால்வாயில் இறந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக கடந்த (பிப் 5) ஆம் தேதி அண்ணாநகர் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கால்வாயில் இறந்து கிடந்த சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. கடந்த ஐந்தாம் தேதி நள்ளிரவு அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கோணிப்பை ஒன்றை இழுத்து சென்று கால்வாயில் வீசியது பதிவாகி இருந்தது.‌

பின்னர் போலீசார் சிசிடிவி காட்சியில் பதிவான அடையாளங்களை வைத்து யார் அந்த பெண் என்பதை குறித்து விசாரணை மேற்கொண்டதில் கோணிப்பையை கால்வாயில் வீசிய பெண் அண்ணாநகர் கிழக்கு அன்னை சத்யா நகர் ஏழாவது தெருவை சேர்ந்த 57 வயதுடைய அம்பிகா என்பது தெரிய வந்தது.‌ பின்னர் போலீசார் சந்தேகத்தின் பேரில் நேற்று அம்பிகாவை பிடித்து விசாரணை நடத்தினர்.‌ இதில் கழிவுநீர் கால்வாயில் சடலமாக கிடந்தவர் அம்பிகாவின் கணவரான 60 வயதுடைய சந்தானம் என்பது தெரிய வந்தது.‌

சந்தானம் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அம்பிகாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கணவன்- மனைவி இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அம்பிகா தனியார் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்த நிலையில் அவரது கணவர் சந்தானம் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்திருக்கிறார். அப்போது தினந்தோறும் சந்தம் குடித்து விட்டு வந்து மனைவியை சித்திரவதை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இதேபோல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சந்தானம் வழக்கம் போல் மது அருந்தி விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மனைவி அம்பிகா வீட்டில் இருந்து கத்தியால் கணவரை குத்தி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பின்னர் இறந்த உடலை என்ன செய்வது என்று தெரியாமல் உடலை வீட்டிலேயே வைத்திருந்த நிலையில் 5 ஆம் தேதிஒரு கோணிப்பையில் வைத்து கட்டி இழுத்துக் சென்று வீட்டருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் வீசி விட்டு வீட்டிற்கு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. எனவே அம்பிகாவை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.