சென்னை அடுத்த தையூர் பகுதியைச் சேர்ந்தவர் தவெக நிர்வாகியான ஏழுமலை. இவரது 21 வயது மகள், படூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது பிரவீனும், ஏழுமலையின் மகளும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த (ஆக 16) ஆம் தேதி மாலை பிரவீன் வீட்டின் அருகே சென்றபோது, ஏழுமலையின் தம்பி மணிகண்டன் அவரை வழிமறித்ததாக கூறப்படுகிறது. அப்போது, ஏழுமலையின் மகளுடனான காதலை கைவிடுமாறு மணிகண்டன் வலியுறுத்தியதாகவும், ஆனால் இருவரும் காதலித்து வருவதால் பிரிய முடியாது என பிரவீன் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், தனது அண்ணன் ஏழுமலை, அவரது மகன் கௌதம் ஆகியோரை செல்போனில் தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு வரவழைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, ஏழுமலை, கௌதம் மற்றும் கௌதமின் நண்பர் நித்திஷ் ஆகியோர் அங்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது பிரவீனை தாக்கிய அவர்கள், பின்னர் கத்தியால் தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பிரவீன் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பிரவீன், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பிரவீனின் தாய் பிரபாவதி அளித்த புகாரின் பேரில், கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் தமிழன்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணையின் அடிப்படையில், பிரவீனை தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் ஏழுமலை, அவரது மகன் கௌதம், தம்பி மணிகண்டன் மற்றும் கௌதமின் நண்பர் நித்திஷ் ஆகிய 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மகளை காதலித்த இளைஞர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா, காதல் விவகாரமே கொலைக்கான காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரவீன் கொலை செய்யப்பட்டதாகவும், இது ஆணவக் கொலைக்கு நிகரான சம்பவம் என்றும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கேளம்பாக்கம் பகுதியில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்