Chennai MTC Luxury Bus Incident 
க்ரைம்

“இளம் பெண் போதையில் பேருந்தில் ரகளை” - பயணிகளிடம் ஆபாச வார்த்தையில் பேசி அட்ராசிட்டி.. சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரல்!

அவருடன் பயணித்த மற்றொரு பெண் அவரை கண்டித்து பேச முயன்ற போது அவரையும் அந்த இளம்பெண் தாக்கியதாக கூறப்படுகிறது...

Mahalakshmi Somasundaram

சென்னையில் நள்ளிரவில் மாநகர சொகுசுப் பேருந்து ஒன்றில் மதுபோதையில் இளம்பெண் ஒருவர் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. சுமார் 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க அந்த இளம்பெண், பேருந்தில் பயணித்தபடி அங்குமிங்கும் நடந்து கொண்டு, தன்னிடம் என்ன தவறு எனக் கேட்டு பயணிகளிடம் தகாத வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது.

மேலும், டிக்கெட் எடுக்காமல் பேருந்தில் பயணித்த அவர், தன்னுடன் வந்த மற்றொரு பெண் எங்கே எனக் கேட்டு தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் ஓட்டுநர் இருக்கைக்கு அருகே உள்ள முகப்புப் பகுதியில் அமர்ந்துகொண்டு, மதுபோதையில் தொடர்ந்து உளறியுள்ளார். இதனைப் பார்த்த பயணிகள் சிலர் அந்தப் பெண்ணை தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது அவர்களிடமும் அந்தப் பெண் தகராறில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளில் பேசியதாக வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதற்கிடையே, அவருடன் பயணித்த மற்றொரு பெண் அவரை கண்டித்து பேச முயன்ற போது அவரையும் அந்த இளம்பெண் தாக்கியதாக கூறப்படுகிறது. ஓடும் பேருந்துக்குள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால், அந்தப் பெண்ணை பயணிகள் கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். மேலும், பேருந்தில் இருந்து அவரை உடனடியாக இறக்கிவிட முடியாத சூழலும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில், பேருந்து நடத்துநரும் பயணிகளும் இணைந்து அந்தப் பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைக்கலாம் என முடிவெடுத்துள்ளனர். பின்னர் அந்த இளம்பெண்ணை கண்டித்து அவரது பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், மாநகர சொகுசுப் பேருந்துக்குள் மதுபோதையில் இளம்பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதாக வெளியாகியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்