Rayapuram Children's Home Warden Case 
க்ரைம்

“சிறுவர்களை ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்திய வார்டன்” - இரவில் ஆடைகளை கழற்ற சொல்லி சித்ரவதை.. அரசினர் விடுதியில் அதிர்ச்சி!

தங்களுக்கு நேர்ந்த சம்பவம் குறித்து அழுது கொண்டே தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்...

Mahalakshmi Somasundaram

சென்னை ராயபுரத்தில் உள்ள அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் தங்கிப் படிக்கும் பள்ளி மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதி வார்டன் மீது புகார் எழுந்துள்ளது. மேலும், சிறுவர்களை இரும்புக் கம்பியால் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், வார்டன் குமரேசனைக் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை திருவொற்றியூர் மற்றும் அமைந்தகரை பகுதிகளைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவர்கள், காசிமேடு சூரிய நாராயணன் சாலையில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியுள்ளனர்.

அவர்கள் ராயபுரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு காப்பக வார்டன் குமரேசன் மதுபோதையில் விடுதிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவர்களைப் எழுப்பி, இரும்புக் கம்பியால் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும், சிறுவர்களின் ஆடைகளைக் கட்டாயப்படுத்தி கழற்றச் சொல்லி, அவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாகவும் கூறப்படுகிறது. வார்டனின் செயலால் அதிர்ச்சியடைந்த சிறுவர்கள், தங்களுக்கு நேர்ந்த சம்பவம் குறித்து அழுது கொண்டே தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்களின் புகாரைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாகக் காப்பகத்திற்கு விரைந்தனர். அங்கு வார்டன் குமரேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, புகாரின் அடிப்படையில் ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குமரேசனைக் கைது செய்தனர். காப்பகத்தில் தங்கியுள்ள மற்ற சிறுவர்களுக்கும் இதுபோன்ற அத்துமீறல்கள் நடந்துள்ளனவா என்பதை அறிய போலீசாரும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட குமரேசனிடம் விசாரணை நடத்திய பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பாகத் தங்கிப் படிக்க வேண்டிய அரசினர் காப்பகத்தில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்துள்ள சம்பவம் சென்னையில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்