Chennai Woman Murder 
க்ரைம்

“சூட்கேஸில் துண்டிக்கப்பட்ட பெண்ணின் உடல்” - வீட்டில் கொதிக்க வைக்கப்பட்ட பாகங்கள்.. பல நாட்களுக்கு பிறகு சிக்கிய குற்றவாளி!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணிக் லஸ்கர் மற்றும் பகபதி மாஜி என்ற தம்பதியினர...

Mahalakshmi Somasundaram

டெல்லி ஆக்ராவில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் கண்டெடுக்கப்பட்ட சிவப்பு நிற சூட்கேஸில் ஆணின் உடல் பாகங்கள் இருப்பதாக முதலில் தகவல் வெளியான நிலையில், அது பெண்ணின் உடல் என்பது தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடல் பாகங்களுடன் சென்னையைச் சேர்ந்த துணிக்கடையின் பாலித்தீன் பையும் இருந்ததால், கொலை சென்னையில் நடந்திருக்கலாம் என ஆக்ரா போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து சென்னை ரயில்வே போலீசாரின் உதவியுடன் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆண் மற்றும் பெண் என இருவர் சிவப்பு நிற சூட்கேஸுடன் ரயில் நிலையத்திற்கு வந்தது தெரியவந்தது. அவர்கள் சூட்கேஸை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வைத்துவிட்டு, ரயில் புறப்படுவதற்கு முன்பாகவே அங்கிருந்து வெளியேறியதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது.

இதையடுத்து, சென்னை சென்ட்ரல் முதல் செங்கல்பட்டு வரையிலான பல்வேறு ரயில் நிலையங்களில் பதிவான சுமார் 350 சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், சந்தேகத்திற்குரிய ஆண் மற்றும் பெண் பூங்கா ரயில் நிலையம் வழியாகச் சென்று, கூடுவாஞ்சேரி பகுதியில் இறங்கியிருக்கலாம் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், வாடகை வீடுகள் மற்றும் தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த வீட்டை சோதனையிட்ட போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டிற்குள் பெண்ணின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக கிடந்ததாக கூறப்படுகிறது. மேலும், பெரிய பாத்திரம் ஒன்றில் மைதா மாவு மற்றும் காய்கறிகளுடன் உடல் பாகங்கள் கொதிக்க வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அங்கிருந்து கைப்பற்றப்பட்ட உடல் பாகங்கள் மற்றும் பிற பொருட்கள் தடயவியல் ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதையடுத்து அந்த வீட்டில் தங்கியிருந்தவர்கள் குறித்து போலீசார் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 38 வயதுடைய ஹைதுல் நிஷா என்ற பெண் அங்கு தங்கியிருந்ததாகவும், அவருடன் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணிக் லஸ்கர் மற்றும் பகபதி மாஜி என்ற தம்பதியினர் தங்கியிருந்ததாகவும் தகவல் கிடைத்தது.

பின்னர் ஹைதுல் நிஷா குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அவர் தாம்பரம் பகுதியில் பணியாற்றி வந்ததும், அதே பகுதியில் தனது மகனுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வந்ததும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. நிஷாவின் மகனிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, தாயின் நடத்தை பிடிக்காததால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்ததாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

RedSuitcaseMurder

இதனிடையே, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஹைதுல் நிஷாவுக்கும் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணத்தை மீறிய தொடர்பு இருந்ததாகவும், அந்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கொலை நடைபெற்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டது. அதே நேரத்தில் பணம் தொடர்பான பிரச்சினை உள்ளிட்ட வேறு காரணங்கள் இருந்தனவா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் புதிய திருப்பமாக, கூடுவாஞ்சேரி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் தேடப்பட்டு வந்த மாணிக் உத்தின் லஸ்கர் மற்றும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். 22 வயதான  லஸ்கர், அசாம் மாநிலம் கச்சார் மாவட்டம், சோனாபாரிகாட் பகுதியைச் சேர்ந்த மோனிருத்தின் லஸ்கரின் மகன் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணிக் உத்தின் லஸ்கர் மற்றும் அவரது மனைவியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட தகவல் படி கள்ளக்காதல் காரணமாக கொலை நடந்தது தெரியவந்துள்ளது. இருப்பினும் கொலைக்கான காரணம், பெண்ணை கொலை செய்த விதம், உடலை துண்டு துண்டாக வெட்டியதன் பின்னணி உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலையை இதுவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், அதனை தேடும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சூட்கேஸில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் தற்போது கொலையாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் பெண்ணை பிடித்த பின்னரே இந்த கொலை தொடர்பான முழுமையான தகவல்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்