க்ரைம்

தேர்வெழுத தாய் வற்புறுத்தியதால் மாணவன் தற்கொலை!

தேர்வு எழுதச் செல்ல தாய் வற்புறுத்தியதால் 11 ஆம் வகுப்பு மாணவன் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

சென்னை தி.நகர் தாமஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுமி (47) என்பவர் தனது கணவர் ராஜாவை கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து மகன் ஹரிஷ் (15) உடன் வசித்து வருகிறார். ஹரிஷ் கோபாலபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு அறிவியல் பிரிவில் படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை தூங்கிக் கொண்டிருந்த ஹரிஷை தேர்வு உள்ளதால் பள்ளிக்குச் செல்லுமாறு தாய் சுமி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது பள்ளிக்குச் செல்லமாட்டேன், தேர்வு எழுதமாட்டேன் என தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டே அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடிக்குச் சென்ற ஹரிஷ் 3வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.

இதைக் கண்ட கட்டிட காவலாளி ஹரிஷின் தாய் சுமிக்கு தகவல் தெரிவித்த நிலையில், 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஹரிஷை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு ஹரிஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பின் தலையில் ஏற்பட்ட காயத்தால் ஹரிஷ் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் ஹரிஷின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.